search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்மட்டம் குறைந்தநிலையில் உள்ள வைகை அணை
    X
    நீர்மட்டம் குறைந்தநிலையில் உள்ள வைகை அணை

    34 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்- மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

    நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால், வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்து விட்டது. இதனால் மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 34.88 அடியாக குறைந்து விட்டது. அணையில் இருந்து மதுரை மாவட்டம் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், தேனி கூட்டுக்குடிநீர் திட்டம், பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு மட்டும் வினாடிக்கு 72 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ஏற்கனவே வைகை அணையில் 20 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளது. இதனால் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு வைக்க முடியும் நிலை உள்ளது. இந்தநிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழையும் பொய்த்து விட்டது.

    வைகை அணைக்கு இக்கட்டான நிலையில் கைகொடுக்கக்கூடிய, முல்லைப்பெரியாறு அணையிலும் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. இதனால் அங்கிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. நீர்வரத்தே இல்லாத சூழலில் வைகை அணை நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக வேகமாக குறைந்து வருகிறது.

    இதன் எதிரொலியாக, வைகை அணையை மட்டுமே நம்பியுள்ள மதுரை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 72 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வருணபகவான் கருணை காட்டினால் மட்டுமே மதுரை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
    Next Story
    ×