search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருந்து கடை அடைக்கப்பட்டு இருந்த காட்சி.
    X
    மருந்து கடை அடைக்கப்பட்டு இருந்த காட்சி.

    சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம்: நீதி கேட்டு மருந்து கடைகள் அடைப்பு

    சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.
    பெரம்பலூர்:

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தடையை மீறி செல்போன் கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் திடீரென உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதில் தான் தந்தை- மகன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், அதற்கு நீதி கேட்டும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நேற்று மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 240 மருந்து கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரம் அடைக்கப்பட்டு, பின்னர் அதன்பிறகு திறக்கப்பட்டது.

    உயிரிழந்த வணிகர்களுக்காக மாலையில் பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடை அடைப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரம்பலூரில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படவில்லை. ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் வேண்டுகோளுக்கு இணங்க அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மருந்து கடைகள் நேற்று காலை7 மணி முதல் 11 மணி வரை அடைக்கப்பட்டன. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 135 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
    Next Story
    ×