search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதிநீர் சங்கமிக்கும் கால்வாயில் குறைந்த அளவே நீர் காணப்படுவதை காணலாம்
    X
    பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதிநீர் சங்கமிக்கும் கால்வாயில் குறைந்த அளவே நீர் காணப்படுவதை காணலாம்

    கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 20.42 அடியாக பதிவானது.
    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டின்படி அம்மாநில அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி.தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.நீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கண்டலேறு அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீரானது பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 811 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை நிலவரப்படி அந்த அணையில் 21 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியில் சங்கமிக்கும் இடத்தில் குறைந்த அளவு நீரே காணப்பட்டது. சிலர் மீன் பிடித்து கொண்டிருப்பதை காண முடிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி முதல் நேற்று காலை 6 மணி வரை பூண்டி ஏரிக்கு 8.060 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 8.060 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது சாதனையாக கருதப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 20.42 அடியாக பதிவானது. 290 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு வெறும் 15 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது.
    Next Story
    ×