search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த காட்டு யானை
    X
    உயிரிழந்த காட்டு யானை

    வாயில் காயத்துடன் சுற்றிய காட்டு யானை உயிரிழப்பு

    வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
    கோவை:

    கோவை கோட்ட வனப்பகுதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைக்கட்டி மலைப்பகுதியில் இருந்து கோபனாரி செல்லும் வழியில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை சுற்றித்திரிந்தது. அது, அந்த பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாமல் இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அவர்கள், பலாப்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களுக்குள் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர். இதனால் அந்த யானைக்கு உடல்நிலை தேறி வனப்பகுதிக்குள் சென்றது. நேற்று முன்தினம் காலை அந்த யானை மீண்டும் கோபனாரி பிரிவு வனப்பகுதியில் சுற்றியது. பின்னர் சோர்வடைந்த நிலையில் திடீரென்று அங்கேயே படுத்துக்கொண்டது.

    வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த யானையை பரிசோதித்தபோது அதன் வாயில் புண் இருந்தது. மேலும் அதில் இருந்து சீழ் வடிந்து கொண்டு இருந்தது.

    இதனால் அந்த யானையால் சாப்பிட முடியவில்லை. எனவே அது சோர்வாக படுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதற்கு 35 பாட்டில் குளுக்கோஸ், சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், வலி நிவாரணிகள் ஆகியவை ஊசி மூலம் செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இது குறித்து வன அதிகாரி கூறுகையில், “இறந்த யானைக்கு 10 வயது இருக்கும். அது ஆண் யானை ஆகும். அதன் வாய்ப்பகுதியில் 9 செ.மீ. முதல் 15 செ.மீ. நீளம் வரை காயம் இருந்தது. அதை பார்க்கும் போது 2 யானைகள் சண்டையிட்ட போது தந்தம் குத்தியதில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த காயத்தில் சீழ் வைத்ததால் யானையால் உணவு சாப்பிட முடியவில்லை. இதனால் அந்த யானை இறந்து உள்ளது” என்று கூறினார்.
    Next Story
    ×