search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை
    X
    ராணிப்பேட்டை

    சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு 3 திட்டங்கள் மூலம் சலுகைகள், மானியம்- கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு 3 திட்டங்கள் மூலம் சலுகைகள், மானியம் வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கு பயன் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. படித்த மற்றும் படிக்காத, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட விவரங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தவும் தமிழக அரசின் பல்வேறு வகையான திட்டங்கள், சலுகைகள் மற்றும் மானியங்களை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வழங்கி வருகிறது.

    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்:- நடப்பு ஆண்டான 2020-2021ல் மாவட்டத்தில் 25 தொழில் முனைவோர்கள் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை உள்ள அனைத்து உற்பத்தி மற்றும் சேவை, தொழில் நிறுவனங்கள் நிறுவ வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெறும் தொழில் முனைவோர்களுக்கு மானியம் அளிப்பதற்கு ரூ.2½ கோடி மானிய நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்டத்துக்கான திட்ட ஒதுக்கீடு மற்றும் இலக்கீட்டில் 50 சதவீதம் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்:- இந்தத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 2020-2021ம் ஆண்டுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற 60 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சமும் மானிய தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சமும், சேவை தொழில், வியாபாரத்துக்கு ரூ.5 லட்சம் பெறலாம்.

    பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்:- இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் பெற வேலூர், காங்கேயநல்லூர் ரோட்டில் அமைந்துள்ள இணை இயக்குனர், பொது மேலாளர், மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் அடையலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×