search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு தலையணையில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழுவதை காணலாம்
    X
    களக்காடு தலையணையில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழுவதை காணலாம்

    பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

    தென்மேற்கு பருவமழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து உள்ளது.
    நெல்லை:

    கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, பாபநாசம், அம்பை பகுதியில் காலையில் சாரல் மழை பெய்தது.

    நேற்று காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம் அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டர் மழையும், சேர்வலாறு அணைப்பகுதியில் 14 மில்லிமீட்டர் மழையும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 12.2 மில்லிமீட்டர் மழையும் பெய்து உள்ளது. மழையில்லாமல் வறண்டு கிடந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 35.45 அடியாக இருந்தது.

    நேற்று முன்தினம் இரவில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று காலையில் இருந்து அணைக்கு 1648 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 40 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 48.42 அடியாக இருந்தது. ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 54.17 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. அங்கிருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 325 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-15, சேர்வலாறு-14, மணிமுத்தாறு-12.2, தென்காசி-5.2, செங்கோட்டை-4, குண்டாறு-4, அடவிநயினார் அணை-4, களக்காடு-2.6

    களக்காட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் கடும் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் கடுமையான வெப்பம் நிலவியது. இந்நிலையில் களக்காடு, சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனைதொடர்ந்து வறண்டு கிடந்த தலையணை, தேங்காய் உருளி அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தலையணையில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகத்தில் தடை உத்தரவு அமலில் இருப்பதால் களக்காடு தலையணை கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×