search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவி
    X
    திற்பரப்பு அருவி

    குமரியில் பருவமழை தீவிரம்- பெருஞ்சாணி அணை ஒரே நாளில் 2¾ அடி உயர்வு

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதையடுத்து குமரியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1½ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 2¾ அடியும் உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில், திருவட்டார், கோழிப்போர் விளை, குளச்சல், ஆணைக்கிடங்கு, இரணியல், சிற்றாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. சிற்றாறு-1-ல் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டிதீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை கொட்டி வருகிறது.

    இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1½ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 2¾ அடியும் உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.10 அடியாக இருந்தது. அணைக்கு 2,203 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 43.85 அடியாக உள்ளது. அணைக்கு 1,289 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-51.4, பெருஞ்சாணி-64.2, சிற்றாறு-1-80, சிற்றாறு-2-52, மாம்பழத்துறையாறு-20, இரணியல்-18.6, ஆணைக்கிடங்கு-11.2, குளச்சல்-24, குருந்தன்கோடு-10, அடையாமடை-22, கோழிப்போர்விளை-28, முள்ளாங்கினாவிளை-60, புத்தன்அணை- 63, திற்பரப்பு-24, நாகர்கோவில்-6.2, பூதப்பாண்டி-3.6, சுருளோடு-41.2, பாலமோர்-32, மயிலாடி-11.2, கொட்டாரம்-7.2.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் லேசான சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்றிற்கு மணிமேடை பகுதியில் நின்ற பழமை வாய்ந்த நாவல் மரம் ஒன்று முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்வயர்களும் அறுந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மின் வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின் வயர்களை சரி செய்தனர்.
    Next Story
    ×