search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி டாக்டர் தயாளன்
    X
    போலி டாக்டர் தயாளன்

    கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறிய போலி டாக்டர் கைது

    பாணாவரம் பகுதியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக்கூறிய போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். அவர் நடத்திய கிளினிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    பனப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 48). இவர், டி.பார்ம் படித்து விட்டு, அப்பகுதியில் சிகிச்சை மையத்தை தொடங்கி பி.கே.சாந்தகுமார் எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் போலியாகப் போர்டு வைத்து, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி வந்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. கலெக்டர் உத்தரவுபடி மாவட்ட மருத்துவ அலுவலர் கீர்த்தி தலைமையில் குழுவினர் பாணாவரம் பகுதிக்கு விரைந்து வந்து, அவரின் சிகிச்சை மையத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கிருந்த தயாளனை பிடித்து விசாரித்தபோது, அவர் டி.பார்ம் படித்து விட்டு சிகிச்சை மையத்தைத் தொடங்கி 20 ஆண்டுகளாகப் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாகக் கூறினார். தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுக்கும் சிகிச்சை அளிப்பதாகக் கூறினார்.

    மேலும் கிளினிக்கில் வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் பெண்களுக்கான கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கிளினிக்குக்கு அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர். தயாளன் மீது மாவட்ட மருத்துவ அலுவலர் கீர்த்தி பாணாவரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதையடுத்து போலி டாக்டர் தயாளன் கைது செய்யப்பட்டார். இவர், ஏற்கனவே 2010-ம் ஆண்டு போலி டாக்டர் வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×