என் மலர்

  செய்திகள்

  என்ஜின் டிரைவர் கீழே இறங்கி வந்து சங்கிலி மூலம் ரெயில்வே கேட்டை பூட்டும் காட்சிகளை படங்களில் காணலாம்.
  X
  என்ஜின் டிரைவர் கீழே இறங்கி வந்து சங்கிலி மூலம் ரெயில்வே கேட்டை பூட்டும் காட்சிகளை படங்களில் காணலாம்.

  திண்டுக்கல் அருகே ரெயில் வரும் போது ‘கேட்’ பூட்டப்படாததால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே, ரெயில் வரும் போது ‘கேட்’ பூட்டப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
  கன்னிவாடி:

  திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு செல்ல ரெயில் பாதை உள்ளது. இந்த ரெயில் பாதை அணைப்பட்டி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு செல்கிறது. இதில் திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு செல்லும் ரெயில் பாதை, ரெட்டியார்சத்திரத்தில் இருந்து தாதன்கோட்டைக்கு செல்லும் சாலையின் குறுக்காக செல்கிறது. இதனால் அந்த இடத்தில் ‘ரெயில்வே கேட்’ அமைக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் நேற்று மாலை திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி ஒரு சரக்கு ரெயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் 2 என்ஜின் டிரைவர்கள் வந்தனர். அந்த ரெயில் ரெட்டியார்சத்திரம் ரெயில்வே கேட்டை நெருங்கிய போது, ‘ரெயில்வே கேட்’ பகுதி என்பதால் என்ஜின் டிரைவர்கள் ஹாரன் அடித்தனர். அப்போது ரெயில்வே கேட்டின் இருபக்கங்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் கேட்டை கடந்து சென்றபடி இருந்தனர்.

  இதைக்கண்ட என்ஜின் டிரைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏதோ விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்த என்ஜின் டிரைவர்கள், உடனடியாக ரெயிலின் வேகத்தை குறைத்தனர். ஒருவழியாக ரெயில்வே கேட்டுக்கு சுமார் 100 மீட்டருக்கு முன்பு ரெயில் வந்து நின்றது. இதையடுத்து டிரைவர்களில் ஒருவர் என்ஜினில் இருந்து இறங்கி, ரெயில்வே கேட்டுக்கு நடந்து சென்று பார்த்தார்.

  அப்போது அங்கு ‘ரெயில்வே கேட்’ பூட்டப்படாமல் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அப்போது அங்கு கேட் கீப்பர் பணியில் இல்லாதது தெரிய வந்தது.

  இதைத்தொடர்ந்து ரெயில்வே கேட்டை பூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு சங்கிலியை எடுத்து கேட்டை அவரே பூட்டினார். பின்னர் அங்கு இருபுறமும் காத்திருந்த பொதுமக்களிடம் ரெயில் கடந்து சென்றதும் இரும்பு சங்கிலியை எடுத்துவிட்டு ரெயில்வே கேட்டை திறந்து விடும்படி கேட்டுக்கொண்டார். அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.

  இதைத்தொடர்ந்து ரெயில் மெதுவாக இயக்கப்பட்டு ரெயில்வே கேட்டை கடக்க தொடங்கியது. உடனே ரெயில்வே கேட்டை பூட்டுவதற்காக கீழே இறங்கிய டிரைவர் மீண்டும் என்ஜினில் ஏறிக்கொண்டார். இதையடுத்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ரெயில்வே கேட் திறந்து கிடப்பதை என்ஜின் டிரைவர்கள் முன்கூட்டியே கவனித்து விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

  ரெயில் என்ஜின் டிரைவர்களின் சாமர்த்தியத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் ரெயில் அந்த இடத்தை கடந்து சென்றதும், அவர்களே ரெயில்வே கேட்டை பூட்டியிருந்த சங்கிலியை எடுத்துவிட்டு சென்றனர். பணியில் இல்லாத கேட் கீப்பர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் வரும் போது ‘கேட்’ பூட்டப்படாமல் இருந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×