என் மலர்
செய்திகள்

திருவண்ணாமலையில் அரசு பஸ்சை ஓட்டி சென்ற டிரைவருக்கு கொரோனா
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு அரசு பஸ் ஒன்று கடலூருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை திருவண்ணாமலை அடுத்த கரிக்கலாம்பாடியை சேர்ந்த டிரைவர் ஓட்டி சென்றார்.
கரிக்கலாம்பாடி கிராமத்தில் ஏற்கனவே 5 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானதால் அந்த கிராமம் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் அனைவருக்கும் 4 நாட்களுக்கு முன்பு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இதில் அரசு பஸ் டிரைவரும் தனது சளி, ரத்த மாதிரியை பரிசோதனைக்காக வழங்கியுள்ளார். இந்த தகவலை அவர் பணிமனை மேலாளருக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அவர் பயணிகளுடன் திருவண்ணாமலை திரும்பியுள்ளார். அப்போது அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அந்த பஸ் கண்டக்டர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அந்த பஸ்சில் பயணித்த பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
காட்பாடி அடுத்த தொண்டான்துளசியை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர் ஜம்மு காஷ்மீரில் ரானுவவீரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 28-ந் தேதி அங்கிருந்து புறப்பட்டு டெல்லி வந்துள்ளார். அங்கிருந்து சென்னை வந்து, பின்னர் சொந்த ஊரான தொண்டான்துளசி கிராமத்திற்கு வந்துள்ளார். அவருக்கு டெல்லியில் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் கொரேனா உறுதி செய்யப்பட்ட ரானுவவீரர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.