search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்சில் ஏறும் பயணிகள்
    X
    நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்சில் ஏறும் பயணிகள்

    நாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி

    நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற பஸ்சில் கண்டக்டர் கூடுதல் பயணிகளை கீழே இறங்க வலியுறுத்தியும் அவர்கள் இறங்காததால், வேறு வழியின்றி 80 பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சென்றது.
    நெல்லை:

    கொரோனா ஊரடங்கால் பஸ் போக்குவரத்து முடங்கியிருந்தது.

    தமிழ்நாட்டில் 68 நாட்களுக்கு பிறகு சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்கலில் நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியது.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, சங்கரன்கோவில், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்பட முக்கிய நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. டவுண் பஸ்களும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட்டது. நேற்று முதல்நாளில் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.

    ஆனால் இன்று அனைத்து பஸ்களிலும் பயணிகள் அதிகஅளவில் ஏற முற்பட்டனர். கண்டக்டர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, அடுத்த பஸ்சில் வருமாறு அறிவுறுத்தி 60 சதவிகித பயணிகளை மட்டுமே ஏற்றிச்சென்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தான் பஸ் போக்குவரத்து தொடங்கியது. நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல இன்று குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டது. காலை 7 மணிக்கு ஒரு பஸ் புறப்பட்டது.

    அதிலும் 60 சதவிகித பயணிகளை விட கூடுதலாகவே பயணிகள் இருந்தனர். அதன்பிறகு காலை 9 மணிக்கு அடுத்த பஸ் இயக்கப்பட்டது. இதனால் நாகர்கோவில் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. 9 மணிக்கு புறப்பட்ட பஸ்சில் ஏராளமான பயணிகள் போட்டிபோட்டு ஏறினார்கள்.

    இதனால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில், மத்தியில் உள்ள இருக்கையிலும் பயணிகள் அமர்ந்தனர். இதுபோக ஏராளமான பயணிகள் நின்று கொண்டும், வாசல்படியில் தொற்றிக்கொண்டும் பயணம் செய்தனர். கண்டக்டர் பயணிகளை கீழே இறங்க வலியுறுத்தியும் அவர்கள் இறங்காததால், வேறு வழியின்றி 80 பயணிகளுடன் அந்த பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது. இதில் பல பயணிகள் முகக்கவசம் அணியாமலேயே புறப்பட்டு சென்றனர்.

    நேற்று புறப்பட்ட பஸ்களில் பெரும்பாலான பயணிகளுக்கு வெப்ப பரிசோதனையும் நடத்தப்பட்டது. அனைவருக்கும் கை கழுவும் திரவமும் வழங்கப்பட்டது. ஆனால் இன்று பயணிகள் கூட்டம் அதிகரித்ததால், எந்த பயணிகளுக்கும் வெப்ப பரிசோதனை நடத்தப்படவில்லை. கை கழுவும் திரவமும் வழங்கப்படவில்லை.

    பஸ்கள் புறப்படும் இடத்தில் கை கழுவும் திரவம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில பயணிகளை அதில் கைகளை கழுவி முறைப்படி பஸ்சில் ஏறினார்கள்.

    இன்று பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் நேற்றை விட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டத்தில் உள்ள டெப்போக்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இன்று இயக்கப்பட்டது. நெல்லை பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிராம புறங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இன்றும் காய்கறி லாரிகள் ஏராளமாக வந்ததால் தொடர்ந்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சில நேரங்களில் பஸ்கள் வெளியே வர காலதாமதமும் ஆனது. சம்பவ இடத்திற்கு பஸ் நிலைய பாதுகாப்பு போலீசார் அவ்வப்போது விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    Next Story
    ×