search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் தங்கமணி
    X
    அமைச்சர் தங்கமணி

    கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு ‘கேங்மேன்’ பணி ஆணைகள் வழங்க நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி

    ‘கேங்மேன்‘ தேர்வு முடிவுகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. பணி ஆணைகள் வழங்குவது குறித்து கோர்ட்டு உத்தரவு வெளியான பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வடசென்னை அனல் மின்நிலையத்தை பொருத்தவரை பணிகள் முடிந்து, ஜூன் மாதத்தில் திறப்பதாக இருந்தது. கொரோனா தாக்கத்தால் 3, 4 மாதங்கள் தாமதமாகிவிட்டது. ஊரடங்கு முடிந்தபிறகு வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் அது திறக்கப்படும். இதன்மூலம் 800 மெகாவாட் மின்உற்பத்தி கிடைக்கும். மற்ற அனல் மின்நிலையங்கள் அமைக்கும் திட்டப்பணிகள் 2023-24-ம் ஆண்டில் முடிவடையும். தற்போது ஊரடங்கு தளர்வையடுத்து தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. முழுமையாக ஆலைகள் செயல்படும்போது 17 ஆயிரம் மெகாவாட் தேவை இருந்தாலும் அதனை மின்வாரியம் அளிக்கும். இருந்தபோதிலும், தற்போது மின்நுகர்வு குறைவாகவே உள்ளது. 3 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி அதிகமாகவே நம்மிடம் உள்ளது.

    ‘கேங்மேன்‘ தேர்வு முடிவுகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. பணி ஆணைகள் வழங்குவது குறித்து கோர்ட்டு உத்தரவு வெளியான பிறகு, இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    நாமக்கல் எம்.எல்.ஏ.வுக்கும், எம்.பி.க்கும் மோதல்போக்கு நீடிப்பது குறித்து அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “அரசியல் காரணத்திற்காகவே, நாமக்கல் எம்.பி. சின்ராஜ், அரசின் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். கொரோனா காலத்தில் பொதுமக்களை சந்திக்காமல் இருந்துவிட்டு, தற்போது எம்.எல்.ஏ. பற்றி சட்டத்திற்கு புறம்பாக, வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக தவறான தகவலை எம்.பி. பரப்பி வருகிறார். எம்.எல்.ஏ. எந்தவித தவறும் செய்யவில்லை என்று நிரூபித்துள்ளார். அதை எதிர்கொள்ள முடியாமல் தன்னை எம்.எல்.ஏ. தாக்குவதாக, எம்.பி. கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

    இந்த தொகுதியில் அரசு திட்டங்களை எம்.பி. ஆய்வு செய்யும்போது ஏதாவது தவறு இருந்தால் அதிகாரிகளிடம் முறையிட வேண்டுமே தவிர, தன்னிச்சையாக சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அரசு அலுவலர்களை மிரட்டுவது தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தும். அதிகாரிகள் வேலை செய்வதை தடுக்கும் வகையில் எம்.பி. தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க.வை சேர்ந்தவர்களிடமே நாமக்கல் எம்.பி.யின் செயல்பாடு குறித்து கேட்டு ஸ்டாலின் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

    நாமக்கல் எம்.எல்.ஏ.வை முதல்-அமைச்சர் கூப்பிட்டு கண்டிக்கவேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “இந்த விவகாரத்தில் எம்.பி.யைதான் தண்டிக்க வேண்டும். ஏனென்றால் நாமக்கல் எம்.எல்.ஏ. எவ்வித தவறும் செய்யவில்லை என்று நிரூபித்து விட்டார். அதை விட்டுவிட்டு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்?. இதுபோன்று நாமக்கல் எம்.பி. செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
    Next Story
    ×