search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கன மழையுடன் விடைபெற்ற அக்னி நட்சத்திரம்

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கன மழை அக்னி நட்சத்திர வெயிலை விரட்டி அடித்தது.
    திண்டுக்கல்:

    மே 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதே போல் தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம கடுமையாக காணப்பட்டது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் பெய்த சாரல் மழை மக்களை ஆறுதலடைய வைத்தது.

    அக்னி நட்சத்திர நிறைவு நாளான நேற்று பல இடங்களில் கன மழை பெய்தது. திண்டுக்கல்லில் மாலை தொடங்கிய சாரல் மழை பின்னர் படிப்படியாக அதிகரித்து இரவு வரை நீடித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது.

    பழனியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக பகலில் கடுமையான வெயிலும், மாலையில் பரவலான மழையும் பெய்து வந்தது. நேற்றும் நகர் பகுதியிலும், மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கடந்த 3 நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில் நேற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் குளிச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

    போடியில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதே போல் கம்பம், உத்தமபாளையம், போடி, பெரியகுளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் அருவிகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

    தேனி மாவட்டம் காமையகவுண்டன்பட்டி தெற்கு தண்ணீர்பாறை பகுதியில் வசிப்பவர் முருகன். விவசாயியான இவர் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று மாலையில் இப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இவரது தோட்டத்தில் இருந்த மாடுகள் மீது பலத்த சத்தத்துடன் இடி தாக்கியதில் 2 பசு மாடுகள் மற்றும் ஒரு நாட்டு மாட்டு கன்றுக்குட்டி உயிரிழந்தது.

    இது குறித்து காமையகவுண்டன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமர், கால்நடை மருத்துவர்கள் சந்திரசேகர், செல்வம் ஆகியோர் பார்வையிட்டு இறந்த பசு மாடுகளை தோட்டத்தில் புதைத்தனர்.
    Next Story
    ×