search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் பேருந்து நிலையம்
    X
    பெரியார் பேருந்து நிலையம்

    ஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா?

    மதுரை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருப்பதால் முதல் கட்டமாக பஸ் போக்குவரத்தை தொடங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
    மதுரை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கிறது.

    தற்போது மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    244 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 2 பேர் பலியானவர்களை தவிர 152 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 90 பேர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டாக்டர்கள், செவிலியர்கள், காவலர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 35 பேர் மதுரை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 55 பேர் வட மாநிலங்களில் இருந்து மதுரை வந்தவர்கள். மேலும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வந்த நபர்கள் மதுரையில் உள்ள கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

    மதுரை மாவட்டம் கொரோனா தாக்கத்தால் தொடர்ந்து சிவப்பு மண்டலத்தில் நீடித்து வருகிறது. கடந்த 3 மற்றும் 4-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

    சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சர்வீஸ் சென்டர்களும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இது தவிர சலூன் கடைகளுக்கு இருந்த தடையும் நீக்கப்பட்டது. இரவு 7 மணி வரை சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே வருகிற 31-ந் தேதிக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்திற்குள் முதல் கட்டமாக பஸ் போக்குவரத்தை தொடங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், மருத்துவ குழுவின் ஆலோசனைகளை நாளை நடைபெறும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.

    எடப்பாடி பழனிசாமி

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்வை முதல்-அமைச்சர் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ளூர் பஸ்களை இயக்க அரசு அனுமதிக்கும் பட்சத்தில் மாவட்டத்திற்குள் பஸ்களை இயக்கவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பயணிகளை ஏற்றுவது மற்றும் முகக்கவசம் அணிந்திருக்கும் பயணிகளை மட்டுமே பஸ்சில் பயணம் செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிகிறது.

    பஸ் ஊழியர்களும் 1-ந் தேதி தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    எனவே 1-ந்தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா? அல்லது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது மதுரை மக்கள் மத்தியில் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு நாளை மாலை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×