search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை மீட்பு
    X
    குழந்தை மீட்பு

    மதுரையில் ரூ.1½ லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு- ஆட்டோ டிரைவரிடம் விசாரணை

    மதுரை கலெக்டர் உத்தரவின்பேரில் போலீசார் கோவில்பட்டி விரைந்து சென்று விற்கப்பட்ட குழந்தையை மீட்டனர். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    நாகப்பட்டினம் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் அ‌ஷரப் அலி, மீனவர். இவரது மனைவி நிர்மலா பேகம். இந்த தம்பதிக்கு 3½ வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, நிர்மலா குழந்தைகளை விட்டு விட்டு, தாய் வீட்டிற்கு சென்று விட்டார். குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால், அ‌ஷரப் அலி உறவினர் ஒருவர் வீட்டில் மகனை வளர்த்து வந்தார்.

    மகளை ஆட்டோ டிரைவர் அசைன் முகமது என்பவர் மூலம் மதர்சாவில் சேர்க்க உதவி கேட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட அவர், முகமது அ‌ஷரப் அலியின் மகளை மதராசாவில் சேர்த்து விடுவதாக நம்பிக்கை வார்த்தை கூறி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த குழந்தை இல்லா தம்பதிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தனது குழந்தை விற்கப்பட்டது தெரியாமல் குழந்தையை பார்க்க அழைத்துச் செல்லுமாறு அ‌ஷரப்அலி கேட்க, அசைன் முகமது பல்வேறு காரணங்களை கூறி குழந்தையை கண்ணில் காட்டாமல் இருந்து வந்தார்.

    ரம்ஜான் அன்று குழந்தையை பார்க்க வேண்டும் என்று அ‌ஷரப் அலி அடம்பிடிக்க, அசைன் முகமது வேறு வழியின்றி மதுரை நெல்பேட்டையில் குழந்தை உள்ளது என்று கூறினார்.

    இதையடுத்து தனது மகளை பார்க்க நாகூரில் இருந்து திருவாரூர் வரை மகனுடன் நடந்தே வந்தார் அ‌ஷரப் அலி. அதன் பிறகு திருவாரூரில் தெரிந்தவர்களிடம் உதவி கேட்க அவர்கள் அ‌ஷரப் அலி மற்றும் குழந்தையை கார் மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை நெல்பேட்டை சென்ற பார்த்தபோது அங்கு மகள் இல்லை என்பதை அறிந்த அ‌ஷரப் அலி அதிர்ச்சி அடைந்தார். அசைன் முகமதுவை போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது உன் குழந்தையை விற்று விட்டோம். அந்த குழந்தை இருக்கும் இடம் எனக்கு தெரியாது.

    குழந்தையை கேட்டு போன் செய்தால் காவல் துறையில் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அ‌ஷரப் அலி, கலெக்டர் வினயிடம் நடந்ததை கூறினார். அதன் பிறகு கலெக்டர் உத்தரவின் பேரில் அசைன் முகமதுவை போனில் தொடர்பு கொண்ட போலீசார், குழந்தை இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கலெக்டர் உத்தரவின்பேரில் மதுரை போலீசார் கோவில்பட்டி விரைந்து சென்று விற்கப்பட்ட குழந்தையை மீட்டனர். ஒரு மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக அசைன் முகமதுவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பின்னர் நாகப்பட்டினத்தில் உள்ள குழந்தைகள் முகாமிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை கலெக்டர் மேற்கொண்டார்.

    இதற்கிடையே பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததால் அ‌ஷரப் அலி மற்றும் அவரது மகனை கலெக்டர் அலுவலகத்தில் உணவு வழங்கி தங்க வைக்கப்பட்டனர்.

    பின்னர் அ‌ஷரப் அலி, மகனை ரெட் கிராஸ் அமைப்பின் உதவியுடன் சிறப்பு அனுமதி பெற்று கார் மூலமாக நாகூருக்கு அனுப்பி வைத்து கலெக்டர் வினய் உதவி செய்தார்.

    Next Story
    ×