search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுமண தம்பதி
    X
    புதுமண தம்பதி

    தந்தை கொரோனாவால் பலி- தனிமைப்படுத்தப்பட்ட புதுமண தம்பதி

    மணமகனின் தந்தை கொரோனாவால் பலியானதையடுத்து சென்னை திரும்பிய மணமகன், மணமகள் உள்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
    நாகர்கோவில்:

    சென்னை மணலியைச் சேர்ந்த 63 வயது முதியவரின் மகனுக்கும், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று முன்தினம் கூடங்குளத்தில் திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு மணமகனின் தந்தை திடீரென மயங்கி விழுந்து பலியானார். அவரது உடல் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    முதியவரின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இதில் முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை கூடங்குளத்தில் இருந்து ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் 8 பேரும் ஆசாரிபள்ளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பரிசோதனையின் முடிவுகள் இன்று மாலை கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கூடங்குளத்தில் நடந்த திருமண விழாவில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 20 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல திருமணம் முடிந்தவுடன் மணமகன், மணமகள் மற்றும் 10 பேர் உடனடியாக சென்னை திரும்பிச் சென்றுள்ளனர். இந்த விவரம் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சென்னை மணலியில் இருக்கும் மணமகன், மணமகள் உள்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு கொரோனா தொற்று எதுவும் உள்ளதா? என சோதனை நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே பலியான முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தகனம் செய்ய முடிவு செய்துள்ளனர். நாகர்கோவில் வடசேரி புளியடியில் உள்ள மின்சார தகன மையத்தில் முதியவர் உடல் தகனம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
    Next Story
    ×