search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிதாக பூ மார்க்கெட் அமையும் இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தும் பணிகள் நடந்தபோது எடுத்த படம்.
    X
    புதிதாக பூ மார்க்கெட் அமையும் இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தும் பணிகள் நடந்தபோது எடுத்த படம்.

    கோவை பூ மார்க்கெட் இடம் மாற்றம்

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நெருக்கடி மிகுந்த கோவை பூ மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.
    கோவை:

    கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. பூக்கள் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் இங்கு நடக்கிறது. கோவை மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களிலிருந்தும் பூக்கள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் கோவை பூ மார்க்கெட்டிலிருந்து வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவையின் அடையாளம் என்று சொல்லும் அளவிற்கு பூ மார்க்கெட் புகழ் பெற்றது.

    இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனி மனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காக மிகவும் நெருக்கடியான இடங்களில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட்டுகள் பஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

    அதன்படி, தியாகி குமரன் மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த கடைகள் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்துக்கும், ராமர் கோவில் மார்க்கெட், உக்கடம் பஸ் நிலையத்துக்கும், சிங்காநல்லூர் உழவர் சந்தை அங்குள்ள பஸ் நிலையத்துக்கும், எம்.ஜி.ஆர் .மொத்த காய்கறி மார்க்கெட், சாய்பாபா காலனி பஸ் நிலையத்துக்கும், அண்ணா மார்க்கெட், சாய்பாபா காலனியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டன.

    இவற்றை தொடர்ந்து மக்கள் அதிகம் வந்து செல்லும் அதே நேரத்தில் நெருக்கமாக உள்ள பூ மார்க்கெட்டையும் வேறு இடத்துக்கு மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆக்கி மைதானத்துக்கு அருகில் உள்ள இடத்திற்கு பூ மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

    இதற்காக அந்த இடத்தில் உள்ள மண் மேடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இன்னும் சில தினங்களில முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கொரோனா பரவலை தடுப்பதற்காகத்தான் பூ மார்க்கெட் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. புதிய இடத்தில் எத்தனை கடைகள் அமைக்கப்படும் என்று உறுதியாக தெரியவில்லை. கடைகள் அமைக்கும் பணிகள் இன்னும் ஒருவாரத்துக்கு நடக்கும். அந்த பணிகள் முடிந்தபின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியும்’ என்றார்.
    Next Story
    ×