search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரித்து கொள்ள வேண்டும்- மாநகராட்சி கமிஷனர்

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறினார்.
    மதுரை:

    மதுரை மாநகராட்சி சார்பில் உச்சபரம்புமேடு கரிசல்குளம், மேலவாசல், ஐராவதநல்லூர் ஆகிய குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 ஆயிரத்து 215 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோரிப்பாளையம் சந்திப்பு, யானைக்கல் சந்திப்பு, பெரியார் சந்திப்பு உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனாவை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மதுரை மாநகராட்சியில் உள்ள 142 வரையறுக்கப்பட்ட குடிசைப்பகுதிகளிலும், 189 வரையறுக்கப்படாத குடிசைப்பகுதிகளிலும் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மாநகராட்சியின் சார்பில் இலவசமாக வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி, ஓமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ் வந்தபிறகு மாத்திரை மருந்துகளை சாப்பிடுவதை விட வருமுன் காக்கும் வகையில் மாநகராட்சியால் வழங்கப்படும் சத்து மாத்திரைகளை முறையாக சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி கமிஷனர்கள் பிரேம்குமார், சேகர், மணியன், விஜயா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×