search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    வாழை விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும்- ஜி.கே.வாசன்

    வாழைதார்களுக்கு உரிய விலை கொடுத்து வாங்கி விற்பனைக்கு கொண்டுசெல்ல தமிழக அரசு நடவடிக்கை என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்றால் மாநிலம் முழுவதும் விவசாயத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்பாராத மழையின் காரணமாக விவசாய விளைபொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக பச்சை வாழை சாகுபடி செய்துள்ள வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி, கரூர் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட வாழையும் மற்றும் நாமக்கல், ஈரோடு மாவட்டப் பகுதிகளில் பயிரிட்ட வாழையும் அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றினால் பெரும் சேதம் அடைந்துள்ளது.

    அதாவது ஒவ்வொரு ஏக்கரிலும் இருந்த வாழைத்தாரானது மழையாலும், காற்றாலும் பாதிக்கப்பட்டு ஒடிந்ததால் ஏக்கருக்கு சுமார் 3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மாநிலத்தில் ஆங்காங்கே பெய்த மழையாலும், வீசிய சூறைக்காற்றாலும் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட வாழைகள் கடும் சேதமடைந்துள்ளது. இப்படி மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்த பூவன், பச்சை வாழையானது பாதிக்கப்பட்டு விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் வாழை விவசாயிகள் பெரும் சோகத்தில் இருக்கிறார்கள்.

    அதுமட்டுமல்ல சாகுபடி செய்த வாழைதார்களை தற்போதைய ஊரடங்கால் முழுவதும் விற்கமுடியாமல், தேக்கமடைந்து வீணாகுவதால் குறைந்த விலைக்கே விற்கமுடிகிறது. விலை வீழ்ச்சி அடைந்தாலும் இப்போதைய ஊரடங்கில் பூவன், பச்சை வாழைபழங்களை வாங்குவதும் குறைந்துவிட்டது. இதனால் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி துன்பத்தில் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் வாழை விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வாழை விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். கொரோனா பாதிப்புக்கு எதிர்ப்பு சக்தியாக வாழைப்பழமும் இருப்பதாக செய்திகள் தெரிவிப்பதால் மாநிலம் முழுவதும் உள்ள பூவன், பச்சை வாழைதார்களை தமிழக அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்தால் வாழை விவசாயிகள் பலன் அடைவார்கள்.

    எனவே வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாழைதார்களுக்கு உரிய விலை கொடுத்து வாங்கி விற்பனைக்கு கொண்டுசெல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வாழை விவசாயிகளை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×