search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசம்
    X
    முகக்கவசம்

    திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசங்கள் ரூ.10-க்கு விற்பனை

    திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசங்கள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிகம் பேர் வாங்கி பயன் அடைகின்றனர்.

    திருச்சி:

    கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களையும் அணியலாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து முகக்கவசங்கள் தயாரிப்பில் டெய்லர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஈடுபட்டனர். இரவு, பகலாக பணி நடைபெற்றது.

    திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,500 பேர் உள்ளனர். இங்கு உள்ள கைதிகளுக்கு பல்வேறு கைத்தொழில்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருவதுடன் சோப்பு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட பல் வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வைரசில் இருந்து பொது மக்கள் தப்பும் வகையில் முகக்கவசங்களை தயாரித்துள்ளனர். 1,500 கைதிகளில் 21 பேர் தையல் பயிற்சி பெற்றவர்கள். அவர்களின் மூலம் முகக்கவசம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 70,000 மாஸ்க்குகள் விற்பனை செய்து உள்ளனர். பொது மக்கள் பலர் தங்களுக்கு தேவையான முகக்கவசங்களையும் தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் மொத்தமாகவும் முககவசங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

    ஒரு முகக்கவசம் ரூ.10-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிகம்பேர் வாங்கி பயன் அடைகின்றனர்.

    இதுபற்றி சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வகை மாஸ்க்குகள் மூன்றடுக்கு முறையில் தயாரிக்கப்படுகின்றது. பொது மக்கள் நலன் காக்கும் நடவடிக்கையாக கைதிகளும் முகக்கவசங்களை உற்சாகமாக தயார் செய்கின்றனர். பொது மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தனியார் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர் என்றார்.


    Next Story
    ×