search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர்
    X
    குடிநீர்

    சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது

    சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6 டி.எம்.சி. தண்ணீர் உள்ளதால் இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் வரும் மாதங்களில் தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். இதனால்இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு வர வாய்ப்புஇல்லை.
    சென்னை: 

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. 

    கடந்த ஆண்டு பருவழை ஓரளவு கைகொடுத்தாலும் குடிநீர் வழங்கும் ஏரிகளில் எதிர்பார்த்த அளவு தண்ணீர் வந்து சேரவில்லை. 

    இந்த நிலையில் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பர் மாதம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த  தண்ணீர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதுவரை 7.55 டி.எம்.சி. தண்ணீர் ஒரே தவணையில் கிடைத்தது. 

    பூண்டிஏரியில் தண்ணீர் இருப்பு அதிகரித்ததை தொடர்ந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டது. 

    தற்போது புழல் ஏரியில் 2932 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது(மொத்த கொள்ளவு 3300 மி.கனஅடி). இதேபோல் பூண்டி ஏரியில் 1065 மி.கன அடி (3300 மி.கனஅடி),  செம்பரம் பாக்கம் ஏரியில் 2017மி.கனஅடி (3645 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் வெறும் 72 மி.கனஅடி (1081 மி.கன அடி) தண்ணீர் இருப்பு உள்ளது. 

    குடிநீர் வழங்கும் இந்த 4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 6 ஆயிரத்து 86 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. இது 6 டி.எம்.சி. அளவாகும். இந்த தண்ணீரை கொண்டு  சென்னையில் வரும் மாதங்களில் தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். இதனால்இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு வர வாய்ப்புஇல்லை. 

    மேலும கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி வருகிற ஜூலை முதல் செப்டம்பர் வரை 2-வது தவணையாக 8 டி. எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும்.

    தற்போதைய நிலவரப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. 

    எனவே 2-வது தவணை யிலும் சென்னை குடிநீருக்கு அதிக அளவு கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீரும சென்னை மக்களின்  குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×