search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    தமிழகத்தில் நகை வியாபாரம் ரூ.80 ஆயிரம் கோடி பாதிப்பு

    தமிழகத்தில் இதுவரை 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தங்கத்தின் விற்பனை பாதித்துள்ளதாக நகை வியாபாரிகள் கூறி உள்ளனர்.
    சென்னை:

    கொரோனா உலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்குவது மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் சிதைத்து வருகிறது.

    அனைத்து துறைகளும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உலக பொருளாதாரத்தில் தங்கத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.

    தற்போது கடைகள் மூடப்பட்டு இருந்தாலும் உலக சந்தை நிலவரத்தின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் 30 ஆயிரம் நகை கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மூடப்பட்டுள்ளன. பொதுவாக இந்த கால கட்டத்தில் தங்க நகைகள் அமோகமாக விற்பனையாகும். ஏனெனில் இது திருமணம் நடைபெறும் காலம்.

    இந்த சீசனில் நகை கடைகளில் பணத்தை வாடிக்கையாளர்கள் கொட்டுவார்கள். நகை கடைக்காரர்கள் அள்ளுவார்கள். ஆனால் கடைகள் மூடப்பட்டு விட்டதால் பொட்டு தங்கம் கூட யாராலும் வாங்கவும் முடியவில்லை. விற்கவும் முடியவில்லை.

    இதுவரை 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை பாதித்துள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள். மே 3-ந்தேதி வரையிலான காலகட்டத்தை கணக்கிட்டால் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு வரும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.

    வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அட்சய திருதியை நகை வியாபாரத்தில் இந்த நாள் பொன் நாள். பொன்னை வாங்க வேண்டும் என்பதில் சாமானியர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆசைப்படுவார்கள்.

    இதற்காக நகை கடைகளும் பல சலுகைகள் அறிவித்தும் முன் கூட்டியே முன்பதிவும் நடைபெறும். அட்சய திருதியை நாளில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை வியாபாரம் களை கட்டும்.

    ஆனால் இந்த ஆண்டு கடைகளே திறக்கப் போவதில்லை. இதனால் நகை கடைக்காரர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களாவது விற்பனைக்கு என்று நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நகை கடைகளுக்கு அந்த சலுகை எதுவும் வழங்கப்படவில்லை.

    கொரோனா வைரஸ்

    ஊரடங்கு முடிந்த பிறகும் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் வருவார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் மக்கள் மத்தியில் கொரோனா பீதி தொடரும்.

    எனவே பெரும்பாலும் தீபாவளி கால கட்டத்தில்தான் நகை வியாபாரம் ஓரளவுக்கு சூடு பிடிக்கும் என்று நகை கடைக்காரர்கள் நம்புகின்றனர்.
    Next Story
    ×