search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டிலேயே தனது பிள்ளைகளுக்கு சிகை அலங்காரம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் பெண்மணி.
    X
    வீட்டிலேயே தனது பிள்ளைகளுக்கு சிகை அலங்காரம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் பெண்மணி.

    சலூன் கடைகள் அடைப்பு: சிகை அலங்கார நிபுணர்களாக மாறிய, குடும்பத் தலைவிகள்

    கொரோனா காரணமாக சலூன் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் சிகை அலங்காரம் செய்யும் நிபுணர்களாக குடும்பத் தலைவிகள் மாறியிருக்கிறார்கள். ஹேர் ஸ்டைல் செய்ய முடியாததால் ‘புள்ளங்கோ’க்கள் வேதனை அடைந்துள்ளனர்.
    சென்னை:

    மனிதர்களுக்கு மிடுக்கான பார்வையை கொடுப்பது தலை முடி என்று சொன்னால் அது மிகையல்ல. இதனால்தான் பெண்கள் தங்களுடைய கூந்தலை பராமரிப்பதற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள். பெண்களுக்கு நிகராக ஆண்களும் வித, விதமான ஸ்டைல்களில் முடியை அலங்காரம் செய்து வருகிறார்கள். உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டியுள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதனால் சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சேவிங் செய்வதற்காகவும், முடி வெட்டுவதற்காகவும், தாடிமீசை ஒதுக்குவதற்காகவும், முடிச்சாயம்(டை) பூசுவதற்கு என சலூன் கடைகளையே நம்பி இருப்பவர்கள் கடுமையான சிரமத்தை சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சேவிங் செய்ய முடியாதவர்கள் புதர்கள் போன்று தாடிகளை முகத்தில் வளர்த்தவாறு சுற்றித்திரிவதை காண முடிகிறது.

    நரைமுடியை மறைப்பதற்காக, தலைச்சாயம் பூசியவர்கள் முடியோ வெள்ளி கம்பிகள் போல மிளிர்கின்றன. ‘புள்ளங்கோ’ என்று சொல்லப்படும் சென்னை நகர இளசுகள் தலையின் கீழ் பகுதியில் முடியை ஒட்ட வெட்டிவிட்டு, மேல் பகுதியில் உள்ள முடியை நீளமாக விட்டிருப்பார்கள். இதுதவிர நீளமான அந்த முடியில் பல்வேறு நிறங்களில் கலர் சாயமும் பூசியிருப்பார்கள். சலூன் கடைகள் அடைப்பு காரணமாக ‘புள்ளங்கோ’க்கள் தங்களுடைய ஹேர் ஸ்டைலை பராமரிக்க முடியாமல், மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சிலர், தாங்களே தற்காலிக சிகை அலங்காரம் செய்யும் நிபுணர்களாகவே மாறிவிட்டனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, அவருடைய மனைவி அனுஷ்கா சமையல் செய்ய பயன்படுத்தும் கத்திரியால் முடி வெட்டி அசத்தினார். தற்காலிகமாக சிகை அலங்காரம் செய்யும் நிபுணர்களாக மாறியவர்கள் பலரும், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற ஸ்டைலில் முடிகளை குடும்ப உறுப்பினர்களுக்கு வெட்டி விடுகிறார்கள். மின்சாரத்தில் இயங் கும் ரேசர்களை வைத்து சிலர் முடிவெட்டி அசத்துகிறார்கள்.

    வீட்டில் இருந்து வேலை பார்க்கும் கணவன், ஓயாமல் வேலைகளை வைத்துக்கொண்டே இருக்கும் சுட்டிக் குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல், சமையல் வேலை என எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் குடும்ப தலைவிகளும் முடி வெட்டுபவர்களாக மாறியிருக்கிறார்கள். சீப்புகளையும், சமையலுக்கு பயன்படுத்தும் கத்திரிகளையும் எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்கு ஸ்டெப் கட்டிங், அட்டாக் கட்டிங் உள்பட பல்வேறு விதமான ஸ்டைகளில் வெட்டி நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து குடும்ப தலைவிகளிடம் கேட்டபோது, “பொதுவாக குழந்தைகளுக்கு குறைவான அளவே முடி தலையில் இருக்கவேண்டும். முடி நீளமாக இருந்தால் வியர்வை துளிகள் தலையில் தங்கி, ஜலதோஷம் பிடிக்கும் சூழல் ஏற்படும். இப்போதைய நிலைமையில் சளி பிடித்தாலே, கொரோனா தொற்றாக இருக்குமோ என்ற பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்திவிடும். இதனால் ஊரடங்கு வரையிலும் காத்திருக்காமல் குழந்தைகளுக்கு முடி வெட்டினோம். சலூன் கடையில் வெட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவுக்கு பரவாயில்லை” என்றனர்.
    Next Story
    ×