search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    நாளை விளக்கேற்றி ஒற்றுமையாக நின்று தேச பக்தியை காட்டுவோம்- ஜி.கே.வாசன்

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாளை ஞாயிறு ஏப்ரல் 5-ந்தேதியன்று இரவு 9 மணிக்கு விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழி வகுப்போம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி கடந்த மாதம் 22-ந்தேதி கைத்தட்ட கேட்டுக்கொண்டது ஒற்றுமைக்காக, நாளைய தினம் 5-ந்தேதி இரவு விளக்கேற்ற கேட்டுக் கொண்டது நம்பிக்கைக்காக. எனவே அரசியலை நினைப்பதற்கு இது நேரமல்ல.

    ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றி பெறுவோம். மத்திய- மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பொது மக்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான முறையிலே நடவடிக்கை எடுத்து வருவது நமக்கெல்லாம் கொரோனாவில் இருந்து தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

    இச்சூழலிலே எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நின்றால் தான் பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் என்று மக்கள் எண்ணுவார்கள். அதனை விடுத்து ஏதாவது குறை கூறி அரசியலாக்க நினைத்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    இந்தியாவில் கொரோனாவை ஒழிப்பதற்கு தேவை அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும், ஆதரவும் என்பதால் எதிர்க்கட்சிகளும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய வகையிலே செயல்பட வேண்டும். மேலும் இப்போதைய இந்தியாவுக்கு தேவை தனித்திரு, விழித்திரு, கொரோனாவை ஒழித்திடு.

    குறிப்பாக பாரதப்பிரதமர் அவர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏற்கனவே தொலைக்காட்சி வாயிலாக, வானொலி வாயிலாக ஆற்றிய உரைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதாவது கடந்த 22-ந்தேதி அன்று கைத்தட்ட கேட்டுக்கொண்டது ஒற்றுமையின் அடையாளம்.

    மேலும் நேற்று ஆற்றிய உரையில் நாளைய (05.04.2020) தினம் விளக்கேற்ற கேட்டுக் கொண்டது நம்பிக்கையின் அடையாளம். ஆக நாம் ஒற்றுமையோடு செயல்படுவோம், நம்பிக்கையோடு செயல்படுவோம்.

    இந்த சோதனையான காலத்தில் இருந்து மீண்டு வருவோம். ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான காலம் இது, தேச பக்தியை வெளிப்படுத்துவதற்கான காலம் இது, இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. விமர்சனத்துக்கும், அரசியலுக்கும் இது நேரமல்ல. இதுவே நம் அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    ஏற்கனவே கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகின்ற வேளையில் தொடர்ந்து பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாளை ஞாயிறு ஏப்ரல் 5-ந்தேதியன்று இரவு 9 மணிக்கு விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழி வகுப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×