search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரில் வலம் வந்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரில் வலம் வந்தவர்களை படத்தில் காணலாம்.

    கோவை சரகத்தில் தடையை மீறிய 2 ஆயிரத்து 266 வாகனங்கள் பறிமுதல்

    கோவை சரகத்தில் தடையை மீறி வெளியே சென்றவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 266 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
    கோவை:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தடையை மீறி வெளியே செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெளியே செல்பவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் காரணம் இல்லாமல் வெளியே செல்பவர்களுக்கு நூதன தண்டனைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை சரக பகுதியில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் தடையை மீறி வெளியே சென்றதாக ஏராளமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் கூறியதாவது:-

    கோவை சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் தடையை மீறி வெளியே சென்றதாக நேற்று வரை 3,206 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 2,266 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களுக்கு கோர்ட்டில் அபராதம் செலுத்திய பின்னரே எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை மாநகர பகுதியில் நேற்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. பல இடங்களில் கூட்டமாக நின்று பேசுவதை பார்க்க முடிந்தது. ஆனால் போலீசார் அவர்களை கண்டுகொள்ளவில்லை. சில இடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் போலீசார் சரிவர கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    எனவே காரணம் இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், வீட்டின் அருகே உள்ள சாலையில் கூட்டமாக நின்று பேசுவதை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×