search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளிர்பதன கிடங்கில் முட்டைகள் தேக்கி வைக்கப்பட் டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    குளிர்பதன கிடங்கில் முட்டைகள் தேக்கி வைக்கப்பட் டுள்ளதை படத்தில் காணலாம்.

    நாமக்கல் மண்டலத்தில் 25 கோடி முட்டைகள் தேக்கம்

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக முட்டை விற்பனை சரிந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் இன்று வரை 25 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
    நாமக்கல்:

    கொரோனா வைரஸ் பீதி நிலவி வருவதால் முட்டை, கோழிக்கறி விற்பனை அடியோடு சரிந்துவிட்டது.

    முட்டை, கோழி கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என்று சிலர் தவறான வதந்திகளை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதுதவிர கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் தவறான தகவல்களை கூறி வருகிறார்கள்.

    இதனால் பொதுமக்கள் முட்டை மற்றும் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் ஒரு கிலோ கோழிக்கறி 10 ரூபாய்க்கும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் 5 கிலோ கோழிக்கறி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் 4 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்ட முட்டை தற்போது ஒரு ரூபாய் 95 காசு என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடைகளில் 3 ரூபாய் வரை முட்டைகளை விற்பனை செய்தாலும் அதை பொதுமக்கள் வாங்க தயங்குகிறார்கள். இதனால் முட்டை விற்பனை பாதிப்படைந்துள்ளது.

    கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 25 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இந்த முட்டைகளை குளிர் பதன கிடங்குகளில் வைத்து தனியார் கோழிப்பண்ணையாளர்கள் சேமித்து வைத்துள்ளனர். மேலும் அவர்கள் வேன்கள் மூலம் முட்டைகளை எடுத்துச் சென்று கூவி, கூவி விற்கிறார்கள்.

    இதுகுறித்து கோழிப் பண்ணையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கர்நாடகா மற்றும் கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக எங்களால் மற்ற மாநிலங்களுக்கு முட்டைகளை கொண்டு செல்ல முடியவில்லை. மறுபுறம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள காரணத்தால் சத்துணவு மையங்களுக்கு முட்டை வழங்குவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பீதி பரவுவதால் பொதுமக்கள் அதிக அளவு உட்கொள்ளும் முட்டையை பற்றி பீதி அடைந்தனர். இதனால் நாமக்கல் மண்டலத்தில் இன்று வரை 25 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இருந்தாலும் நாங்கள் பல கிராமங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வது போல முட்டைகளை வேன்களில் எடுத்து சென்று கூவி, கூவி விற்பனை செய்து வருகிறோம்.

    ஒரு முட்டை 2 ரூபாய் என்று விற்றாலும் கூட சிலர் அதை ஒரு ரூபாய்க்கு கேட்கிறார்கள். என்றாலும் நஷ்டத்தோடு விற்பனை செய்து வருகிறோம், அப்படியே விற்பனை செய்தாலும் தேங்கி உள்ள அனைத்து முட்டைகளையும் விற்பனை செய்ய முடியாது. அவற்றை குளிர்பதன கிடங்குகளில் வைத்துதான் ஆகவேண்டும் அதற்கு வாடகையும் கொடுக்க வேண்டும்.

    முட்டைக்கு மானியம் வழங்குமாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவிடம் கேட்டுக்கொண்டோம். 25 கோடி முட்டைகள் தேங்கி உள்ள நிலையில் ஒரு கோடி முட்டைகளுக்கு மட்டுமே மானியம் வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதுவும் 100 முட்டைக்கு ரூ. 10 தான் மானியம் என்று சொல்கிறார்கள். குளிர் பதன கிடங்கில் வைத்துள்ள ரசீதை காட்டினால் தான் மானியம் வழங்கப்படும் என்றும், பண்ணைகளில் உள்ள இருப்பை ஆய்வு செய்த பிறகு தான் மானியம் வழங்குவோம் என்றும் கெடுபிடி விதிமுறைகளை வகுத்துள்ளனர். இதனால் சிறிய கோழிப்பண்ணையாளர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டையின் கொள்முதல் விலையை 195 காசுகளாக நிர்ணயித்து உள்ளது. ஆனால் கடைகளில் முட்டை விற்பனை செய்யப்படும் விலைக்கு இடையே ஒரு ரூபாய் வித்தியாசம் உள்ளது. இதனால் கடைகளில் முட்டை விற்பனை அதிகரிக்கவில்லை.

    முட்டை விற்பனையை அதிகரிக்கவும், முட்டையின் உண்மையான விலையை மக்கள் தெரிந்து கொள்ளவும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் துணை நிறுவனம் தான் கோழி குஞ்சு பொறிப்பகங்களை நடத்தி கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்து பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்கிறது. ஆனால் கோழிப்பண்ணை தொழிலுக்கு சோதனை காலம் வரும்போது பண்ணையாளர்களை காக்க எந்த நடவடிக்கையும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு எடுக்கவில்லை.

    2006-ம் ஆண்டு பறவை காய்ச்சலால் கோழிப்பண்ணை தொழில் பாதிக்கப்பட்ட போது குறைந்த வட்டியுடன் கடன்களை வங்கிகள் வழங்கின. தற்போது கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோழி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் புதிய கடன்களை வழங்கவேண்டும். ஏற்கனவே வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தும் காலத்தை வங்கிகள் நீட்டித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.

    மக்கள் நலத்திட்டங்களுக்கு மாநில அரசு அதிக அளவில் பணத்தை செலவு செய்கிறது. இதுபோல கோழி அல்லது முட்டையை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதே நிலை நீடித்தால் நாமக்கல் பகுதியில் 50 சதவீத கோழிப்பண்ணைகளை மூட வேண்டியது வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வைரஸ் முட்டை மற்றும் கோழி மூலம் பரவுகிறது என்று யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு உடனடியாக ரூ. 1 கோடி பரிசு தொகை வழங்க தயாராக உள்ளோம், மேலும் மாநிலத்தில் முட்டை வியாபாரத்தை மேம்படுத்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விளம்பரம் செய்ய வேண்டும்.

    தமிழகத்தை பொறுத்தவரை நாமக்கல் முட்டை உற்பத்தி மண்டலம், சென்னை விற்பனை மண்டலம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு பிரித்துள்ளது. நாமக்கல் மற்றும் சென்னையில் மட்டுமே முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயத்தை எல்லா மாவட்டங்களிலும் கொண்டு வந்தால் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முட்டை விலையை மக்களும் தெரிந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×