search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உதயகுமார்
    X
    அமைச்சர் உதயகுமார்

    மக்கள் தொகை பதிவேடு பற்றி பயப்பட தேவையில்லை- மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதில்

    மக்கள் தொகை பதிவேடு பற்றி பயப்பட தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக இஸ்லாமிய பிரதிநிதிகளை தலைமை செயலாளர் அழைத்துள்ளார். கடந்த 14-ந்தேதி அவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் கூறியது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

    இஸ்லாமிய மக்கள் மட்டுமல்ல. ஓட்டுமொத்த மக்களிடமும் இந்த சட்டம் பற்றி பயம் இருக்கிறது. எனவே அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அதில் இந்த பிரச்சனை குறித்து முழுமையாக விவாதித்தால் நன்றாக இருக்கும். எனவே அனைத்து கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. சார்பில் வற்புறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:-

    குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை கூறி இருக்கிறோம். மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

    தலைமை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் 49 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட 3 பிரச்சனைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மாநில அரசு தனது சந்தேகம் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. சட்டமன்றத்திலும் பலமுறை விவாதித்துள்ளோம். இதனால் சிறுபான்மையினர் எந்த விதத்திலும் பயப்பட வேண்டாம் என்று முதல்வர் கூறி உள்ளார்.

    இது அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து 2015-ல் முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. கடந்த 12-ந்தேதி பாராளுமன்றத்தில் கபில்சிபல் எழுப்பிய வினாவுக்கு மத்திய மந்திரி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். மக்கள் தொகை பதிவேட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆதாரம் எதுவும் அளிக்க வேண்டாம். தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும்.

    சந்தேகத்துக்குரிய குறியீடு எதுவும் இடம்பெறாது. இதை உள்துறை மந்திரி அமித்ஷாவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

    தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ஆவணம் எதுவும் தேவையில்லை. தகவல் அளிப்பது அவரவர் விருப்பம்.

    தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் இது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. பயப்பட தேவையில்லை என்று மத்திய அரசும் கூறி விட்டது. சட்டசபையிலும் பலமுறை அனைத்துக் கட்சிகள் சார்பில் விவாதித்து விட்டோம். அதற்கு முதல்-அமைச்சரும் பதில் அளித்து விட்டார். இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த கூட்டங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை. சிறுபான்மை மக்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×