search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவிலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    X
    மீனாட்சி அம்மன் கோவிலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை- மீனாட்சி அம்மன் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு

    கொரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் கொரோனோ வைரஸ் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    மதுரை:

    கொரோனோ வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் உலக அளவில் கொரோனோ வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,515 ஆக உயர்ந்துள்ளது.

    157 நாடுகளில் பரவிய கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 415 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மத்திய-மாநில அரசுகள் எச்சரித்துள்ளன. இருமல், சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்கள் கோவிலுக்கு வந்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முக கவசம் வழங்கப்படுகிறது. மேலும் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் கொரோனோ வைரஸ் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவில் ஊழியர்களும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். எனவே இங்கும் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் கை கழுவிய பின்னரே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக கை கழுவும் இடம் மற்றம் சோப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் உட்புற, வெளிப்புற பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவிலின் பிரகாரம் உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இருமல், சளி, காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது வந்தால் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இன்னும் 2 நாட்களில் உடலின் வெப்ப நிலையை பரிசோதிக்கும் கருவி மூலம் பக்தர்கள் சோதிக்கப்பட்டு அதன் பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கோவில் துணை ஆணையர் அறிவித்துள்ளார். கோவில் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 10 தடவைக்கும் மேல் கை கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×