search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான காரும் லாரியும்.
    X
    விபத்துக்குள்ளான காரும் லாரியும்.

    நாமக்கல் அருகே கார்-லாரி மோதல்: 6 பேர் பலி

    நாமக்கல் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு செங்கல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது.

    நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் மெயின் ரோட்டில் 5-வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னவேப்பநத்தம் பகுதியில் நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் லாரி சென்று கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த டாடாசுமோ காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் டாடா சுமோ காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் முன்பகுதியும் பயங்கர சேதம் அடைந்தது.

    இந்த கோர விபத்தில் டாடா சுமோ காரில் இருந்த டிரைவர் உள்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    1. சசிகுமார் - டிரைவர், கரட்டுப்பகுதி, செல்லப்பா காலனி, நாமக்கல்.

    2. சதீஷ்குமார் (வயது 38), கரட்டுப்பகுதி, செல்லப்பா காலனி, நாமக்கல்.

    3. தர்மா (38), பாட்னா, பீகார்.

    4. பப்லூ (39). பாட்னா, பீகார்.

    5. பேச்சன்குமார் (35), பீகார்.

    6. ஜித்தேந்திரன் (20), ஆக்காபூர், பீகார்.

    இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் ஏராளமான ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர். பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த காரை சுமார் அரைமணி நேரம் போராடி மீட்டனர்.

    அந்த காருக்குள் இருந்த 6 உடல்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக நாமக்கல் - திருச்சி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.

    இந்த விபத்து குறித்து எஸ்.பி. அருளரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விபத்தில் உயிர் இழந்த 6 பேரும் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் உள்ள ஒரு கட்டிடத்தில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பணியை முடித்துக் கொண்டு அவர்கள் தங்கி உள்ள இடத்திற்கு டாடாசுமோ காரில் வரும்போது விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவர் யார்? என்பது குறித்து லாரியின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த தர்மா என்பவர் டைல்ஸ் ஒட்டும் காண்டிராக்ட் எடுத்து இருந்தார். இவர் பீகார் மாநிலத்தில் இருந்து 3 தொழிலாளர்களை அழைத்து வந்து நாமக்கல்லில் தங்க வைத்து நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் டைல்ஸ் ஒட்டும் பணிக்கு அழைத்து சென்று வந்தார்.

    நேற்று காட்டுப்புத்தூருக்கு பீகார் தொழிலாளர்கள் 3 பேர் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்றார். அவர்களுடன் காரில் டிரைவர் சசிகுமாரும் சென்றார். 6 பேரும் வேலை முடிந்து காரில் வந்தபோது இந்த விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.

    விபத்தில் இறந்தவர்கள் குறித்து பீகாரில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×