search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X
    அமைச்சர் கடம்பூர் ராஜூ

    அ.தி.மு.க.விற்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

    ரஜினிகாந்த் இன்னும் மக்களை சந்திக்கவில்லை எனவும் அ.தி.மு.க.விற்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் குறித்து தற்போது பரபரப்பாக செய்திகள் வெளிவருகிறது. அவர் கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவர் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. அவர் 25 ஆண்டுகளாக ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமான நடைமுறையாகத்தான் பார்க்கிறோம்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து ஆலோசித்து தான், இந்த முறை த.மா.கா.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கி உள்ளனர். யாரும் யாருக்கும் நெருக்கடி கொடுக்க முடியாது. எந்த நிலையிலும், எந்த கட்சியின் நெருக்கடிக்கும் அ.தி.மு.க. ஆளானது கிடையாது.

    கடந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது த.மா.கா.வுக்கு வழங்கி உள்ளோம். இன்னொரு முறை அந்த வாய்ப்பு கிடைக்கும்போது, மற்றொரு கூட்டணி கட்சிக்கு வழங்குவோம்.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம் நேரில் வழங்கி வலியுறுத்துவார்.

    கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் போன்றவை பரவியதால், அங்குள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆரம்ப கட்டத்திலேயே தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நோய் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நோய் எங்கும் பரவாமல், பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் சினிமா தியேட்டர்களை மூட வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×