search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூண்டில் சிக்கிய சிறுத்தை.
    X
    கூண்டில் சிக்கிய சிறுத்தை.

    அம்பையில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தை சிக்கியது

    அம்பையில் 10 நாட்களுக்கும் மேலாக தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த சிறுத்தை இன்று அதிகாலை கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது.
    சிங்கை:

    நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான திருப்பதியா புரம் மற்றும் இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 10 நாட்களாக சிறுத்தையின் அட்டகாசம் அதிகரித்து வந்தது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஊருக்குள் புகுந்து வீடுகளில் கட்டப்பட்டிருந்த நாய்கள் மற்றும் ஆடுகளை அந்த சிறுத்தை தூக்கி சென்று விடுவது வாடிக்கையாக இருந்து வந்தது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் பாபநாசம் சரக வனவர் மோகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதி மெயின் ரோட்டில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேம்பையாபுரம் கிராமத்தில் ஒரு சிறுத்தை புகுந்தது. அங்கு முப்புடாதி (62) என்பவரது வீட்டின் ஆட்டு கொட்டகையில் நுழைந்து, அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டை கடித்துக்கொன்று விட்டு, அதன் 2 குட்டிகளையும் தூக்கி சென்றது.

    இதுகுறித்து வனத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்திராநகர் பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். மேலும் வனத்துறையினர் இரவு பகலாக ரோந்து சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை கிராமத்திற்கு வந்த சிறுத்தை அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது. சிக்கிய சிறுத்தை சுமார் 2 வயதுடைய பெண் சிறுத்தை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அதனை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக அட்டகாசம் செய்த சிறுத்தை பிடிபட்டதால், அப்பகுதி கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.



    Next Story
    ×