search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உளவுத்துறை எச்சரிக்கை: அதிமுக-பா.ஜனதா தலைவர்களுக்கு பாதுகாப்பு

    தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சி முக்கிய தலைவர்களுக்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக  தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் முஸ்லிம் பெண்கள் அதிகளவு கலந்து கொள்கின்றனர்.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு கோவையில் இந்து முன்னணி தலைவர் ஆனந்த் தாக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் தவறாக பரப்பப்படுகின்றன என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்றவற்றில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவது கண்காணிக்கப்படுகிறது.

    சமூக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பா.ஜனதா தலைவர்களுக்கு மட்டுமின்றி அ.தி.மு.க. தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் நிர்வாகங்களை உஷார்படுத்தி உள்ளோம். தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என எச்சரித்துள்ளோம்.

    சமூக வலைதளங்களில் தவறாக செய்திகளை பரப்புவோர்களை கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை பாயும். சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா, இந்து முன்னணி உள்பட இந்து இயக்க தலைவர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாநகர பகுதியில் பா.ஜனதா, இந்து முன்னணி உள்பட இந்து இயக்கங்களை சேர்ந்த 15 தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதே போல புறநகர் பகுதியில் உள்ள 22 இந்து இயக்க தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்து இயக்க தலைவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அந்த போலீஸ் நிலைய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×