search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடி விபத்து
    X
    வெடி விபத்து

    சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி- மேலாளர் கைது

    சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் மேலும் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குளக்கட்டாகுறிச்சி மேலப்பட்டி ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதனை விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் உள்ள 8 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் 39 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றனர். அங்குள்ள 3-வது அறையில் தரைசக்கர பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்த பணியில் திருவேங்கடம் அருகே உள்ள சீவகம்பட்டி என்ற சுந்தரேசபுரத்தை சேர்ந்த கணபதிசாமி மகன் சேவுகபாண்டியன் (வயது 31), சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மாரியப்பன் (38) ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர். அவர்கள் வெடிமருந்தினை பட்டாசுக்குள் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த அறையில் வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அந்த அறையில் இருந்த வெடி மருந்து, தரைச் சச்கர பட்டாசு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்தில் அந்த அறைக்குள் சிக்கி கொண்ட சேவுகபாண்டியன் சம்பவ இடத் திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த மாரியப்பன் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில், கழுகுமலை, வெம்பக் கோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையை சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி, விருதுநகர் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முத்துபாண்டி, திருவேங்கடம் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் சேவுக பாண்டியன் உடல் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து நடுவப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அபாயகரமான பட்டாசுகளை அஜாக்கிரதையாக வைத்திருந்தாக பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வ ராஜ் மற்றும் தொழிற்சாலை மேலாளர் மாரிச்சாமி (37) ஆகியோர் மீது திருவேங்கடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மாரிச்சாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் செல்வராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரியப்பனும் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தீ விபத்தில் இறந்த சேவுகபாண்டியனுக்கு ஜெயா என்ற மனைவியும், ரமேஷ் (8), ஆகாஷ் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதேபோல் இறந்த மாரியப்பனுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், அக்‌‌ஷயா (15), கிருஷ்ணவேணி (13) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    Next Story
    ×