search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் நீர்மோர் வழங்கினார்
    X
    போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் நீர்மோர் வழங்கினார்

    கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு காலை, மாலை நீர்மோர்

    கோடை காலம் தொடங்கியதையொட்டி திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தொடங்கி வைத்தார்.
    திருவள்ளூர்:

    நாள் முழுவதும் இரவு-பகல் பாராது சாலையில் நின்று பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு கோடைகாலத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும் அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நீர்மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கி இதனை தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து ஒளிரும் ஜாக்கெட், சிவப்பு பச்சை விளக்குகள், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் போக்குவரத்து போலீசுக்கு வழங்கினார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அரவிந்தன் கூறியதாவது:-

    கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் நீர்மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

    காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வால் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகள் 8 சதவீதம் குறைந்தது.

    இந்த ஆண்டு இதுவரை 35 சதவீதமாக குறைந்துள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் விபத்துக்கள் முழுமையாக குறையும் வாய்ப்பு உள்ளது.

    இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவதால் உயிர் இழப்பு தடுக்கப்படுகிறது. எனவே அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

    மாவட்டத்தில் முக்கிய இடங்களில் இதுவரை 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் பத்தாயிரம் கேமராக்கள் வரை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த ஆண்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 15 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றவாளிகள் எங்கும் தப்பிச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×