search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்தில் காயம் அடைந்த சரண்கவுதம் முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி.
    X
    கத்திக்குத்தில் காயம் அடைந்த சரண்கவுதம் முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி.

    விழுப்புரம் அருகே அடகு கடை உரிமையாளரை கத்தியால் குத்தி ரூ.5 லட்சம் நகை கொள்ளை

    விழுப்புரம் அருகே அடகு கடை உரிமையாளரை கத்தியால் குத்தி ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நாராயணன் நகரை சேர்ந்தவர் சரண்கவுதம் (வயது 28). இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள நத்தாமூர் கிளியூர் கிராமத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இரவில் வீட்டுக்கு செல்லும்போது அடகு பிடித்த நகைகளை ஒரு பையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று வழக்கம்போல் சரண் கவுதம் நகை அடகு கடைக்கு சென்றார். இரவு 10 மணி அளவில் அடகு கடையில் இருந்த நகைகளை ஒரு பையில் எடுத்து வைத்தார். பின்பு கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.

    விழுப்புரத்தை அடுத்த எல்லிஸ்சத்திரம் நீரேற்று நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது அவரது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென்று சரண்கவுதமை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் கத்தியை காட்டி சரண்கவுதமிடம் நகை வைத்திருக்கும் பையை கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம மனிதர்கள் கத்தியால் சரண்கவுதமை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    இதை அறிந்ததும் அந்த மர்ம மனிதர்கள் 2 பேரும் சரண்கவுதம் வைத்திருந்த நகை பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். மர்ம மனிதர்கள் பறித்து சென்ற பையில் மொத்தம் 15 பவுன் நகைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    சாலையில் ரத்தவெள்ளத்தில் சரண்கவுதம் கிடப்பதை பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்பு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அடகுகடை உரிமையாளரை கத்தியால் குத்தி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று இரவு முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் சரண்கவுதமை சந்தித்து விசாரணை நடத்தினார்.

    கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×