search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ராசிபுரம் அருகே கோழி தீவன உற்பத்தி ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை

    ராசிபுரம் அருகே உள்ள கோழி தீவன உற்பத்தி ஆலையில் வருமான வரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல் பட்டியில் தனியார் கோழி தீவன உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.

    இங்கு பல்வேறு இடங்களில் இருந்து கோழி தீவனத்திற்கு தேவையான மூலப்பொருட்களை லாரியில் கொண்டு வந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் இந்த கோழி தீவனங்கள் பேக்கிங் செய்து, பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், ஆலையில் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு 11 மணி அளவில் நாமக்கல் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் திடீரென இந்த ஆலையில் சோதனை நடத்தினர்.

    அதிகரிகள் தனித் தனியாக பிரிந்து நிர்வாக அறை, கேஷியர் அறை, ஊழியர்களுக்கான அறை, ஓய்வு அறை, வாட்ச் மேன் தங்கியிருக்கும் அறை, பம்ப் செட் என ஆலை முழுவதும் சோதனை செய்தனர். குடோன், தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    அப்போது அதிகாரிகள் ஆலையில் இருந்தவர்களிடம் இந்த சோதனை முடியும் வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம், வெளியில் இருந்து ஆட்கள் ஆலைக்குள் வர அனுமதிக்க வேண்டாம் என ஆலை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து ஆலையின் மெயின்கேட் மற்றும் பின்பக்க கேட் மூடப்பட்டது. போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வருமான வரித்துறையினர் தொடர்ந்து தொழிலாளர்கள் வருகை பதிவேடு மற்றும் தினக்கூலி பணியாளர்கள் பதிவேடு, பண்ணை உபகரணங்கள் பதிவேடு, தீவன மற்றும் தீவன மூலப்பொருட்கள் பற்றிய பதிவேடு உள்ளிட்டவைகள் என பல்வேறு ஆவணங்களை எடுத்து முறையாக வரி செலுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

    தினமும் எவ்வளவு மூலப்பொருட்கள் ஆலைக்கு வருகிறது? மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி தீவனம் எத்தனை லோடு ஏற்றுமதி செய்யப்படுகிறது? என நிர்வாகிகளிடம் கேட்டனர். இவற்றுக்கான வரி செலுத்தப்படுகிறதா? என கேட்டனர். இதுவரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய வரி செலுத்தப்பட்டுள்ளதா? அதற்கான ஆவணங்கள் எங்கே? என்றும் கேட்டனர். மேலும் வரவு- செலவு விபரங்கள் குறித்து ஆலை நிர்வாகத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

    இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை விடிய, விடிய நீடித்தது. காலை 6 மணிக்கு சோதனையை முடித்து விட்டு வெளியே வந்தபோது அதிகாரிகள் தங்கள் கைகளில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் வைத்திருந்தனர். எனவே ஆலையில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதேபோல் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கோழி தீவன உற்பத்தி ஆலையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×