search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின் நிலையம்
    X
    தூத்துக்குடி அனல்மின் நிலையம்

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1 மற்றும் 5 ஆகிய 2 யூனிட்டுகள் செயல்படாமல் இருப்பதால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்குள்ள எந்திரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் அடிக்கடி பழுதாகி மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

    இங்குள்ள யூனிட்டுகள் பராமரிப்பு பணிக்காக ஆண்டுக்கு ஒருமுறை சில நாட்கள் நிறுத்தப்படும். அதன்படி 5-வது மின் உற்பத்தி எந்திரம் டர்பைன் பராமரிப்புக்காக சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மற்ற 4 மின் உற்பத்தி எந்திரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் 3-வது மின் உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலனில் திடீர் ஓட்டை விழுந்தது. இதனால் 3-வது மின் உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது. அதில் பழுது நீக்கும் பணி நடந்து வந்த நிலையில், நேற்று அதிகாலையில் 1-வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் பழுது ஏற்பட்டது.

    அந்த யூனிட்டில் நிலக்கரி எரியும் பகுதியில் அதிக அளவில் சாம்பல் கட்டிகளாக தேங்கியது. இதனால் 1-வது மின்உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டதால் அதிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,3,5 ஆகிய 3 யூனிட்டுகளில் மின்உற்பத்தி நடைபெறவில்லை.

    2 மற்றும் 4-வது யூனிட்டுகள் மட்டும் இயங்கியதால் 420 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. 3 எந்திரங்கள் இயங்காததால் 630 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் பழுதடைந்த யூனிட்டுகளை பழுது நீக்கும் பணிகளில் அதிகாரிகள் விரைவாக ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் 3-வது யூனிட்டில் ஏற்பட்டிருந்த பழுது இன்று சரிசெய்யப் பட்டது. இதனால் அந்த யூனிட்டில் மின்உற்பத்தி தொடங்கியது. தற்போது தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1 மற்றும் 5 ஆகிய 2 யூனிட்டுகள் செயல்படாமல் இருப்பதால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×