search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்க புதையல் கிடைத்த இடம்
    X
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்க புதையல் கிடைத்த இடம்

    தங்கப்புதையலை ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் வருகை

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் எடுக்கப்பட்ட தங்கப்புதையலை ஆய்வு செய்ய இன்று தொல்லியல் துறை அதிகாரிகள் வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலோண்டேஸ்வரி கோவில் வளாகத்தில் உள்ள கொட்டாரம் நூற்று கால் மண்டபம் அருகில் உள்ள காலி இடத்தை நேற்று முன்தினம் சுத்தம் செய்து அந்த இடத்தில் நந்தவனம் அமைப்பதற்காக சில பணியாளர்கள் குழி தோண்டிக்கொண்டிருந்தனர்.

    அப்போது செம்பு பெட்டகம் ஒன்று தென்பட்டது. அந்த பெட்டகத்தை மேலே எடுத்து பார்த்த போது அதில் ஏராளமான தங்க காசுகள் இருந்ததை கண்டு பணியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனென்றால் அவை அனைத்தும் மிகவும் பழமையானதாக இருந்தாலும் அவை ‘பளிச்’ என மின்னிக்கொண்டிருந்தது தான்.

    இதுபற்றி கோவில் நிர்வாகம் சார்பில் உடனடியாக ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவரது தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தங்க புதையல் இருந்த பெட்டகத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அந்த பெட்டகத்தில் மொத்தம் 505 தங்க காசுகள் இருந்தன. அவற்றின் மொத்த எடை 1 கிலோ 716 கிராம் ஆகும். இதன் தற்போதையை மதிப்பு சுமார் ரூ.60 லட்சமாகும். ஒரே ஒரு தங்க காசு மட்டும் 10 கிராம் எடை இருந்தது. மற்ற காசுகள் தலா 3.3 கிராம் எடை இருந்தது.

    இந்த தங்க காசுகளில் லட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் சில சுவாமி உருவங்கள், எளிதில் அடையாளம் காண முடியாத அளவில் சில சின்னங்கள் இருந்தன. புதையலில் கிடைத்த தங்க காசுகள் அனைத்தையும் கருவூலத்தில் வைப்பதற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அந்த தங்க காசுகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக மாவட்ட கருவூலத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இந்த தங்க காசுகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தவை? யாருடைய ஆட்சிகாலத்தில் அவை புழக்கத்தில் இருந்தன என தெரியவில்லை. இதுபற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து தமிழக அரசின் தொல்லியல் துறை அதிகாரிகளும், டெல்லியில் இருந்து இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) வருகிறார்கள். அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே இந்த தங்க காசுகளின் வரலாறு, அவை எதற்காக பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது என்பது பற்றி தெரியவரும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கும் இதனை ஆய்வு செய்வதற்கு நேரில் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தங்கப்புதையல் சிக்கிய இடத்தின் அருகில் மேலும் தங்க காசுகள் எதுவும் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுவதால் அந்த பகுதி முழுவதையும் தனியாக அடைத்து வைத்து கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×