search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளநோட்டை அச்சடித்த கும்பல்  - பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள், எந்திரங்கள்
    X
    கள்ளநோட்டை அச்சடித்த கும்பல் - பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள், எந்திரங்கள்

    கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் முன்பே சிக்கிய கும்பல்- போலீஸ் விசாரணையில் தகவல்

    தொழில் அதிபராக வேண்டும் என்ற ஆசையில் கள்ளநோட்டை அச்சடித்த கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவை சரவணம்பட்டி போலீசார் மணியக்காரன் பாளையம் பகுதியில் ரோந்து சென்றபோது வடவள்ளியை சேர்ந்த கிதர்முகமது (வயது 66), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (39) ஆகியோரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 200 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் தடாகம் ரோடு பகுதியை சேர்ந்த சூரியகுமார் (30) என்பவர் கள்ள நோட்டுகளை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சூரியகுமார் வீட்டுக்கு சென்றனர். அங்கு கட்டுக்கட்டாக 200, 500, 2000 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 2 லட்சத்து 64 ஆயிரம் இருந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய எந்திரம், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளையும் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    கள்ளநோட்டு தயாரித்த சூரியகுமார் கணுவாய் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கு கடன் அதிகம் இருந்தது. அதனை சமாளிக்க ஏற்கனவே கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்டு கைதான சாய்பாபா காலனியை சேர்ந்த கிதர்முகமதுவை தொடர்பு கொண்டார்.

    கிதர் முகமது கள்ளநோட்டு அச்சடிப்பது குறித்து சூரியகுமாருக்கு பயிற்சி அளித்தார். அதன்பின்னர் சூரியகுமார் நவீன எந்திரங்கள் மூலம் கடந்த 1 மாதமாக கள்ளநோட்டுகளை அச்சடித்தார் என்று போலீசார் கூறினர்.

    அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான சூரியகுமார் கள்ள நோட்டு தயாரிப்புக்கு பிரத்யேகமாக காகிதங்களை எந்திரம் மூலம் வெட்டியுள்ளார். உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து நகல் எடுத்துள்ளார். பின், லேமினே‌ஷன் கருவி மூலம் அசல் ரூபாய் நோட்டுகளில் உள்ளது போல் மின்னும் இலைகள், நீர் எழுத்துகளை பொருத்தியுள்ளார். புழக்கத்தில் விட இருந்த நிலையில் போலீல் சிக்கினர்.

    கடன் தொல்லையில் இருந்து விடுபடுவும், தொழில் அதிபராக வேண்டும் என்ற ஆசையில் கள்ளநோட்டுகளை அச்சடித்தோம் என்று கைதான கும்பல் போலீசில் வாக்குமூலமாக கூறியுள்ளனர்.
    Next Story
    ×