search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஆர்பி உதயகுமார்
    X
    அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் குழப்பம் ஏற்படுத்துகிறார்- ஆர்பி உதயகுமார் பேட்டி

    குடியுரிமை திருத்த சட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குழப்பம் ஏற்படுத்துகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரையில் இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது, நலத்திட்டம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது, கண் சிகிச்சை முகாம் நடத்துவது, விளையாட்டு துறை சார்பாக பல்வேறு திட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறோம் அது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    பிப்ரவரி 24-ந் தேதியை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்து அதற்கான அரசாணையும் துறைரீதியாக வெளியிட்டு புரட்சியை செய்துள்ளார் முதல்வர்.

    தஞ்சை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தோடு மட்டுமல்லாமல் அதற்கான சட்டவரைவு மசோதாவையும் சட்ட சபையில் முதல்வர் இயற்றியுள்ளார். அதற்கு தற்போது ஆளுநரால் ஒப்புதல் அளிக் கப்பட்டு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது அதனை ஒட்டுமொத்த விவசாய பெருங்குடி மக்களும் வரவேற்றுள்ளனர்.

    இந்தியாவில் நிர்வாகத்தில் சிறப்பாக செயலாற்றும் முதன்மை மாநிலமாக தமிழகம் இடம் பெற்றுள்ளது. அனைவரின் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது. இதில் சந்தேகம் கிடையாது.

    காலம் காலமாக தூர் வாராத கண்மாய்களை பொதுப்பணித்துறை முறையாக தூர்வாரியதன் காரணமாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இது போன்ற சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் குற்றம் சாட்டுவதையே குலத்தொழிலாக மு.க.ஸ்டாலின் கொண்டுள்ளார்.

    ஏற்கனவே தி.மு.க. ஆட்சியின் போதுதான் என்.பி.ஆர். எடுக்கப்பட்டது. அதில் புதிதாக சேர்க்கப்பட்டதாய், தந்தையின் பிறப்பிடம் குறித்த மத்திய அரசு சார்பில் வழிகாட்டி அமைப்பின் விளக்கம் கேட்டு எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு எடுக்கப்பட உள்ள கணக்கெடுப்பில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது.

    என்.பி.ஆர்-ஐ பொறுத்தவரை 2010 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது. ஆகவே தி.மு.க.வினர் மக்களை திசை திருப்பி குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

    சில தினங்களுக்கு முன் சட்டசபையில் சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து முதல்வரிடம் கேட்டபோது மு.க.ஸ்டாலினால் பதில் கூற இயலவில்லை. ஆதலால் அதுகுறித்து எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாக தெரிய வருகிறது.

    மு.க. ஸ்டாலின் ஆதாரத்துடன் பதில் கூறி இருந்தால் அதற்கு முதல்வரும் ஆதாரத்துடன் பதில் கூறி இருப்பார். முதல்வரின் அறிவுறுத்தலின்படி தான் எனது துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கணக்கெடுப்பு குறித்த விவரங்களை சட்டசபையில் கூறி இருந்தேன். இதில் மு.க.ஸ்டாலின் என்ன முரண்பாடு கண்டார் என்பது தெரியவில்லை?.

    குடியுரிமை திருத்த சட்டத்தினாலும், என்.பி.ஆர். சட்டத்தினாலும் எந்தவித பாதிப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடையாது.

    மதுரையில் கட்சியில் இணைப்பு விழா என்று கூறி அவர்களது கட்சியினரையே இணைக்கும் விழாவை தி.மு.க.வினர் நடத்துகிறார்கள். ராஜகண்ணப்பன் நிலைப்பாடை பார்த்து அனைவரும் அவர் மீது பரிதாபப்படுகிறார்கள். மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜகண்ணப்பன் சேர்ந்து இருப்பது, அந்த கப்பலுக்கும் ஆபத்து. அவருக்கும் ஆபத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிர்வாகிகள் வெற்றிவேல், அய்யப்பன், ஐ.பி.எஸ். பாலமுருகன், ராஜசேகர், உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×