search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    தி.மு.க. உள்கட்சி தேர்தல் தொடங்கியது

    தி.மு.க.வின் 15-வது உள்கட்சி தேர்தலை அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், தெற்கு ஒன்றியத்தில் உள்ள அய்யங்கார்குளம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தி.மு.க.வின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

    1949-ம் ஆண்டு முதல் தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 14 தடவை இந்த தேர்தல் நடந்து இருக்கிறது. தி.மு.க. சட்ட திட்டத்தின்படி பல்வேறு கட்டங்களாக கட்சியின் அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.

    தி.மு.க.வின் 15-வது உள்கட்சி தேர்தல் இந்த மாதம் 21-ந்தேதி முதல் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்து இருந்தது. முதல் கட்டமாக ஊர் கிளை, உள் கிளை தி.மு.க. தேர்தல் தொடங்கியது.

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், தெற்கு ஒன்றியத்தில் உள்ள அய்யங்கார்குளம் கிராமத்தில் தொடங்கி வைத்தார். இது அறிஞர் அண்ணா முதன் முதலாக தி.மு.க. கிளை கழக தேர்தலை தொடங்கி வைத்த இடமாகும்.

    இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

    அண்ணாவுக்குப்பிறகு தலைவர் கலைஞருக்கு பிறகு இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை பொறுப்பு ஏற்ற பிறகு நடைபெறும் முதல் கழக தேர்தல் இது. தி.மு.க.வின் 15-வது கட்சி தேர்தல்.

    இப்போது தொடங்கி உள்ள கட்சியின் கிளை தேர்தல், மார்ச் மாதம் 10-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடக்க இருக்கிறது. தமிழகம் முழுவதும் தி.மு.க.வுக்கு 88 ஆயிரத்து 398 கிளைகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தல் மூலம் 16 லட்சத்து 88 ஆயிரத்து 388 பேர் நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இந்தியாவிலேயே சிறப்பாகவும், முறையாகவும் தேர்தல் நடத்தும் ஒரே கட்சி தி.மு.க. தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, ‘சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு புதிய நிர்வாகிகளின் பொதுக்குழு கூடும். கிளை கழக தேர்தலை தொடர்ந்து ஒன்றியம், மாவட்டம், வட்டம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கும். 6 மாதங்களுக்குள் இந்த தேர்தல் நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எழிலழகன், ஆர்.டி. அரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×