search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    சிவந்தி ஆதித்தனார் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்- சீமான்

    தமிழ்ச்சமூகத்தின் உயர்வுக்காக நாளும் உழைத்திட்டு, மறைந்தும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்று சீமான் கூறியுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் என பல துறைகளில் சிறந்து விளங்கி தமிழ்ச்சமூகத்தின் மேம்பாட்டுக்கு அரும்பாடாற்றி உழைத்திட்ட பெருமகன் ஐயா சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் திறக்கும் விழா மகிழ்ச்சி அளிக்கிறது.

    ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ எனும் வள்ளுவப் பெருமகனாரின் கூற்றுக்கிணங்க, தனது வாழ்க்கையை முழுமையாக பொது வாழ்வுக்காகவே வரித்துக்கொண்டு, தந்தைக்கேற்ற தனயனாகச் சிறந்து விளங்கியவர் ஐயா சிவந்தி ஆதித்தனார் என்றால், அது மிகையில்லை.

    தனது கல்லூரிக்காலத்தில் தேசிய மாணவர் படையின் தளபதியாக விளங்கிய அவர், சென்னை மாநகரின் அனைத்துக் கல்லூரிகளின் தேசிய மாணவர் படைகளுக்குத் தலைவராகிற அளவுக்கு அத்துறையின் மீது இளம்வயதிலேயே அதீத ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருந்தார். ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் வழியில் பத்திரிகைத்துறையில் ஈடுபட்ட அவர், மூன்று இடங்களில் இருந்து இயங்கி வந்த ‘தினத்தந்தி’ இதழை தனது அளப்பெரிய நிர்வாகத் திறமையால் 15-க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து இயங்கச் செய்தார்.

    அச்சுக் கோர்ப்பது, அச்சிடுவது, பிழை திருத்துவது, நிருபர், துணை ஆசிரியர் எனப் பல தரப்பட்டப் பணிகளில் ஈடுபட்டுத் தன்னை செதுக்கி மேம்படுத்திக்கொண்டு, நிரூபித்துவிட்டே ‘தினத்தந்தி’ நாளிதழின் நிர்வாக இயக்குனர் பொறுப்புக்கு உயர்ந்தார். உழைக்கும் மக்களிடம் எளிய நடையில் நாட்டு நடப்புகளைக் கொண்டு போய் சேர்த்து, அவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் முதன்மை நாளிதழாக ‘தினத்தந்தி’ விளங்குகிறதென்றால், அதற்கு ஐயா சிவந்தி ஆதித்தனார் ஆற்றியப் பங்களிப்பு மகத்தானது! இதனாலேயே, ‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ என அவர் போற்றிப் புகழப்பட்டார்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராக விளங்கிய இவர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனத் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்து பெருமை சேர்த்துள்ளார். பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவையைப் பாராட்டி, ஐயாவுக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

    இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருதையும் பெற்றிருக்கிறார். அகில இந்திய கராத்தே பெடரே‌ஷன் நிறுவன தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் ஆகியப் பொறுப்புகளை வகித்த ஐயா, தொடர்ந்து இருமுறை சென்னை மாநகர ஷெரீப் ஆகவும் இருந்துள்ளார்.

    இவ்வாறு மகத்தான சாதனைகள் பலவற்றின் மூலம் தமிழ்ச்சமூகத்தின் உயர்வுக்காக நாளும் உழைத்திட்டு, மறைந்தும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த மாமனிதரின் பெயர் வரலாற்றில் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும்! ஓங்குக ஐயாவின் புகழ்!

    இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.
    Next Story
    ×