search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-  துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்.
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்.

    திருவாரூர் அதிமுக சார்பில் 122 ஜோடிகளுக்கு திருமணம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். வாழ்த்து

    ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் 122 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணமான தம்பதிகளுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    திருவாரூர்:

    ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 122 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    திருவாரூர் வன்மீக புரத்தில் நடந்த திருமண விழாவிற்கு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான இரா. காமராஜ் தலைமை தாங்கினார்.

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, ஆர். வைத்தியலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், இரா. துரைக்கண்ணு, ஆர்.பி. உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    மணமக்களுக்கு பட்டு வேட்டி மற்றும் பட்டு சேலை வழங்கப்பட்டது. இதனை அணிந்து கொண்டு மணக்கோலத்தில் விழா அரங்கிற்கு வந்த 122 ஜோடி மணமக்களும் ஒரே மேடையில் உட்கார வைக்கப்பட்டனர்.

    மணமக்களுக்கான தங்கத் தாலி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மணமக்களுக்கு மலர்மாலை வழங்கப்பட்டு மாலை மாற்றிக் கொண்டனர்.

    அதன்பின்னர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் மணமகள்கள் கழுத்தில் மணமகன்கள் தாலி கட்டினர்.

    திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு, திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் காமாட்சி விளக்கு, குங்குமச்சிமிழ், பித்தளை குத்துவிளக்கு கட்டில், மெத்தை, பீரோ, பால் குக்கர், ரைஸ் குக்கர், இட்லி குக்கர், ஹாட்பாக்ஸ் மற்றும் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட 72 வகையான சீர்வரிசைப் பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    அம்மாவின் 72-வது பிறந்த நாளினை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவாரூர் மாவட்டம், வன்மீகபுரத்தில் 122 ஜோடிகளுக்கு இலவச திருமணங்களை நடத்த இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    ‘இல்லறமல்லது நல்லற மன்று’ என்னும் இன்மொழி இணைந்து, உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ இல்வாழ்க்கை என்னும் ஓடத்தில் பயணம் செய்யத் துவங்கி இருக்கும் மணமக்களின் வாழ்க்கை, இன்பம் நிறைந்த பசுஞ்சோலையாக அமைய வேண்டும் என்றும், பெற்றோர், சுற்றத்தாரை அரவணைத்து, அனைத்து செல்வங்களைப் பெற்று, நாடும், வீடும் சிறக்க பல்லாண்டு வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

    அம்மாவின் நல்லாசிகளுடன் நடைபெறும் பிரமாண்ட திருமண நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும் மணமக்களின் சகோதர, சகோதரிகளுக்கும், சுற்றத்தாருக்கும், கழக தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கவிருக்கும் மணமக்களுக்கு, எனது அன்பு வேண்டுகோள். ஒருவரை ஒருவர் புரிந்து என்றும் இணை பிரியாது, ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், அனைத்து வகை செல்வங்களையும் பெற்று, பல்லாண்டுகள் வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் உரித்தாக்கி கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×