search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    வழிபாட்டு தலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை- தமிழக அரசு உறுதி

    வழிபாட்டு தலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்தது.
    சென்னை:

    தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பை, கப் உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, ‘இந்த வழக்கிற்கு நிலை அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    அப்போது நீதிபதிகள், கோவில், தேவாலயம், மசூதி, தர்கா போன்ற வழிபாட்டு தலங்களுக்கு முன்பு பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என்று கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘கோவில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும், அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பிற துறை அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுவார்கள். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்துவார்கள்’ என்று உறுதி அளித்தார்.

    அதேபோல, ‘போராட்டம், ஆர்ப்பாட்டம், விளையாட்டு நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு போலீசார் அனுமதி வழங்கும்போது விதிக்கும் நிபந்தனைகளில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கூடுதலாக ஒரு நிபந்தனையும் எதிர்காலத்தில் விதிக்கப்படும்’ என்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என்று பக்தர்களுக்கு தெரிவிக்கும் விதமாக கோவில்கள் உள்ள பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளம்பர பலகைகள் வைத்து அறிவிக்க வேண்டும். குறிப்பாக கோவில் நுழைவு வாயில்களில் இந்த விளம்பர பலகை வைக்க வேண்டும். மேலும் கிறிஸ்துவ தேவாலயங்கள், மசூதி, தர்கா ஆகிய வழிபாட்டு தலங்களிலும் இதேபோன்ற அறிவிப்பு பலகைகளை அதிகாரிகள் வைக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    அவர்கள் மேலும் தங்கள் உத்தரவில், ‘பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் சணல் பைகள், துணிப் பைகள், இயற்கை முறையிலான கூடைகளை பயன்படுத்த வேண்டும் என்று வழிபாட்டு தலங்களுக்கு முன்பு கடை வைத்திருப்பவர்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்’ என்றும் குறிப்பிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×