search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவின்
    X
    ஆவின்

    திருச்சி ஆவின் நிர்வாகம் திடீர் கலைப்பு

    திருச்சி ஆவின் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டுள்ளதாக இன்று திடீரென அறிவிக்கப்பட்டது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று ஆவின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருச்சி:

    தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூரை உள்ளடக்கிய திருச்சி ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவருக்கான தேர்தலும் நடைபெற்றது.

    இதில் தலைவராக முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலரும், திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளருமான கார்த்திக்கேயன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆவின் தலைவராக பணியாற்றி வந்ததுடன், கட்சி பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

    இந்தநிலையில் திருச்சி ஆவின் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டுள்ளதாக இன்று திடீரென அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி நடைபெறும் என்றும், அதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 27-ந்தேதி நடைபெறும் என்றும் ஆவின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி ஆவின் சேர்மனாக கார்த்திக்கேயன் பதவியேற்று ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது ஆவின் நிர்வாகத்திலும், அ.தி.மு.க.வினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு, முதல்-அமைச்சரே அறிவித்ததாக கார்த்திக்கேயன் தன்னிச்சையாக வேட்பாளர் ஒருவரை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. தலைமை கழகத்தை பொறுத்தவரை கவுன்சிலர்கள் தேர்தல் முடிந்தபிறகுதான் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் வேட்பாளர் பற்றி முடிவெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

    கார்த்திக்கேயன் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டது சமுதாய ரீதியாக குழப்பம் நிலவியதுடன் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பின்னடவையும் ஏற்படுத்தியதாக கட்சியினர் மத்தியில் புகார் எழுந்தது.

    மேலும் கார்த்திக்கேயன் திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வில் தனி அணியாக செயல்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கார்த்திக்கேயன் மீது ஆதாரங்களுடன் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சிலர் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் திருச்சி ஆவின் நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×