search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலீஸ் சீருடை அணிந்து வசூல் செய்த என்ஜினீயரிங் பட்டதாரி - போலீசார் விரட்டிய போது விபத்தில் பலி

    திருப்பூர் அருகே போலீஸ் சீருடை அணிந்து வசூல் செய்த என்ஜினீயரிங் பட்டதாரியை போலீசார் கைது செய்ய விரட்டிய போது விபத்தில் சிக்கிய பலியானார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் போலீஸ் சீருடையில் மோட்டார்சைக்கிள் மற்றும் லத்தியுடன் வாலிபர் ஒருவர் அவ்வழியாக வரும் இரு சக்கர வாகனங்களை மறித்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

    அவரது போலீஸ் சீருடையில் பேட்ஜ் இல்லாததாலும் அவருடைய நடவடிக்கையில் சந்தேகமும் அடைந்த பொதுமக்கள் அருகே உள்ள பல்லடம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அறிவொளிநகர் புறக்காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அறிவொளிநகர் புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ்காரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். போலீஸ் சீருடையில் இருந்தவரிடம் சட்டையில் பேட்ஜ் இல்லை. அடையாள அட்டையை காண்பியுங்கள் என கேட்டார்.

    அந்த சமயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் இருந்து 63 வேலம்பாளையம் நோக்கி வேகமாக சென்றார்.

    அவருக்கு பின்னால் அறிவொளிநகர் புறக்காவல் நிலைய போலீஸ்காரர் இரு சக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்றார்.பின்னர் உயர் அதிகாரிகளிடம் போலீஸ் சீருடையில் ஒரு வாலிபர் இரு சக்கர வாகனத்தில் 63 வேலம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் 63 வேலம்பாளையம் நால்ரோடு பகுதியில் இருந்து மங்கலம் செல்லும் வழியில் போலீஸ் சீருடையில் வந்த வாலிபரின் இரு சக்கர வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்த போது தனியார் பனியன் கம்பெனி அருகே மங்கலத்தில் இருந்து 63 வேலம்பாளையம் நோக்கி வந்த வேன் மோதியது. இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது பற்றி தகவல் அறிந்து பல்லடம் டி.எஸ்.பி.முருகவேல் மற்றும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போலீஸ் சீருடையில் வந்த வாலிபர் யார் என போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் அஜித்குமார் (23)என்பது தெரியவந்தது. அஜித்குமாரின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.அஜித்குமார் தற்போது அவரது தாயாருடன் அனுப்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.அஜித்குமார் அவரது தாயாரிடம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் தனியார் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலைக்கு செல்வதாக கூறி சாதாரண உடையில் வீட்டிலிருந்து கிளம்பி வந்து, பின்னர் போலீஸ் சீருடை அணிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு பணம் பறித்ததும் தெரிய வந்தது.

    அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணபதிபாளையத்தில் இதே போல போலீஸ் சீருடையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது 2 சிறுவர்களிடம் இருந்து பறித்தது தெரிய வந்தது.

    வேன் மோதி பலியான அஜித் குமார் என்ஜினீயரிங் படித்துள்ளார். போலீஸ் வேலையில் சேர வேண்டும் என ஆசையில் இருந்துள்ளார். ஆனால் நிறைவேறவில்லை. எனவே போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

    இதற்காக கோவை ஆயுதப்படை மைதானம் பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீஸ் சீருடை தைத்து வாங்கி வந்து வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் பறித்தது தெரிய வந்தது.

    அஜித் குமார் தனது தாயாருடன் முதலில் வால்பாறையில் வசித்து வந்தார். அவரது தாய் அங்குள்ள எஸ்டேட்டில் வேலை பார்த்தார். சமீபத்தில் தான் அவர்கள் அனுப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளனர். அஜித் குமார் தாய் செட்டிப்பாளையத்தில் உள்ள கழிவு குடோனில் வேலை பார்த்து வருகிறார்.அஜித் குமார் தனது தாயாரிடம் பனியன் கம்பெனியில் சூப்பர் வைசர் வேலைக்கு சென்று வருவதாக தெரிவித்து வந்துள்ளார். தற்போது அவர் போலீஸ் சீருடையில் வேன் மோதி பலியான பின்னர் தான் அவரத தாய்க்கு தனது மகன் போலீஸ் போல் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் தெரிய வந்தது.

    விபத்து நடைபெற்ற இடத்தில் உள்ள பனியன் நிறுவன நுழைவு வாயில் அருகே பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் போலீஸ் சீருடையில் வந்த வாலிபர் மீது வேன் மோதுவதும் பின்னால் காரில் போலீசார் வரும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.

    இதற்கிடையே அஜித் குமாரை போலீசார் விரட்டி சென்றதால் விபத்து ஏற்பட்டதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவின. போலீஸ் சீருடையில் இருந்த வாலிபரை அறிவொளி நகர் புறக்காவல் நிலைய போலீஸ்காரர்கள் துரத்தவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×