search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் தேசிய கொடியுடன் ஊர்வலமாக வந்த முஸ்லிம் அமைப்பினர்
    X
    மேட்டுப்பாளையத்தில் தேசிய கொடியுடன் ஊர்வலமாக வந்த முஸ்லிம் அமைப்பினர்

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம்

    சென்னையில் போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடந்த 14-ந்தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர்.

    இதனை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறவும் கோவை வடக்கு மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் சாய்பாபா காலனி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வடகோவை அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் வளாகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஏ.அல்துல் தலைமை தாங்கினார்.

    கணுவாயில் உள்ள மஸ்ஜித் மின் ஹாஜில் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாத் தலைவர் ஏ.கே.இக்பால் வரவேற்றோர். இதில் பி.ஆர். நடராஜன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் காயல்மஹ்பூப் டி ஹூசைன், அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹூசைன் ஆகியோர் பேசினர்.

    இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபைத்தலைவர் அப்துல் ரகீம், செயலாளர் ஜலாலுதீன், இம்தாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் ஜமாத் சார்பில் வால்பாறை பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஜமாத் அமைப்பின் தலைவர் காதர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செபீர், அலி (மனிதநேய மக்கள் கட்சி), பால்பாண்டி (தி.மு.க.), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

    கோவை மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா, இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து கூட்டணி அரசியல் கட்சிகள் சார்பாக தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. பேரணி மேட்டுப்பாளையம் காரமடை ரோடு கூட்டுறவு காலனியில் இருந்து புறப்பட்டது. பேரணிக்கு ஐக்கிய ஜமாஅத் பேரவை தலைவர் வி.எம்.இ. முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் அக்பர் அலி, மேட்டுப்பாளையம் ஜமாஅத்துல் உலமா தலைவர் அக்பர் அழி தாவூதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை ம.தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் டி.டி.அரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.அருண்குமார், தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன், நகர செயலாளர் முகமது யூனுஸ், சண்முகசுந்தரம், சுரேந்திரன் ,கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முகமது அலி, ராஜா உசேன், இணை ஒருங்கிணைப்பாளர் முகமது அப்பாஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் எஸ், எம்.அய்யூப், அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டணி அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் கலந்து கொண்டவர்கள் தனித்தனியாக தேசியக்கொடியை எடுத்தும், சுமார் 100 அடி நீளமுள்ள தேசியக்கொடியை கைகளில் உயர்த்தி பிடித்த படியும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்களையும் முழங்கியும் சென்றனர்.

    பேரணி காரமடை ரோடு அண்ணாஜிராவ் ரோடு வழியாக சென்று பெரிய பள்ளிவாசல் திடலில் முடிவடைந்தது. முடிவில் ஐக்கிய ஜமாஅத் பேரவை துணைத் தலைவர் முகமது ‌ஷரிப் நன்றி கூறினார்.

    இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கோவை குனியமுத்தூரில் இன்று மாலை வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் தடியடியை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக்கோரியும் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

    திருப்பூர் சி.டி.சி. பஸ் நிறுத்தம் அருகே உள்ள அறிவொளி சாலையில் முஸ்லிம்கள் 1000-க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதேபோல பெருமாநல்லூர் சாலை, சாந்தி தியேட்டர் அருகே 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

    தாராபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள அரசமரம் ஜின்னா மைதானத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை தொடங்கி ஆர்ப்பாட்டம் விடிய விடிய நடைபெற்றது. இன்று காலையும் தொடர்ந்து. இதில் ஏராமானோர் கலந்து கொண்டனர்.

    இதில், மத்திய பா.ஜனதா அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    நீலகிரி மாவட்டம், பந்தலூரில் உள்ள சேரம்பாடி பகுதியில் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் கலந்து கொண்ட பேரணியும், அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

    இதில் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×