search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    மதுரையில் ஒரே ஆண்டில் 66 பெண்களிடம் 312 பவுன் தங்கச் சங்கிலிகள் வழிப்பறி

    மதுரை மாநகரில் 2019-ம் ஆண்டு 66 வழிப்பறி சம்பவங்கள் நடந்து உள்ளன. இதன்மூலம் 2497 கிராம் தங்கச் சங்கிலிகள் பறிபோய் உள்ளன. இதில் 747 கிராம் தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டு உள்ளன.
    மதுரை:

    மதுரையில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த டிசம்பர் 25 முதல் 28-ந்தேதி வரை எல்லீஸ் நகர் பாண்டியம்மாள் (3 பவுன்), பழங்காநத்தம் பொன்னம்மாள் (2 பவுன்), முடக்குசாலை சாந்தா (15 பவுன்), பைக்காரா ராதா (5 பவுன்) ஆகிய 4 பெண்களிடம் மூன்றே நாளில் 25 பவுன் தங்கச் சங்கிலிகளை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

    இதுதொடர்பாக மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமி‌ஷனர் பழனிகுமாரிடம் கேட்டபோது, “குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம்” என்று தெரிவித்தார். ஆனால் இதுவரையிலும் கொள்ளையர்கள் பிடிபடவில்லை.

    எஸ்.எஸ். காலனி விவேகானந்தா தெருவை சேர்ந்த சந்திரபிரகாஷ் மனைவி ஜெயராணி ( வயது 30). இவர் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி மதியம் நேருநகர், நேதாஜி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேர் ஜெயராணி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரிமேடு அடுத்த பொதும்பு பசிங்காபுரம் விஷால் நகரை சேர்ந்த ஜெயராமன் மனைவி மகேஸ்வரி (வயது 42). இவர் சென்னை அறநிலையத்துறையில் அதிகாரியாக உள்ளார்.

    இந்தநிலையில் மகேஸ்வரி கடந்த ஜனவரி 10-ந்தேதி இரவு மோட்டார்- சைக்கிளில் டிபி ரோடு பகுதியில் சென்றார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேர் பின்தொடர்ந்து வந்து, மகேஸ்வரியிடம் 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுதொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநகர் சுந்தர் நகரைச் சேர்ந்த வேல் கென்னடி மனைவி அருணா (வயது 50). இவர் கடந்த ஜனவரி 14-ந்தேதி இரவு கோவிலுக்கு செல்வதற்காக மேல வடம்போக்கி தெருவில் நடந்து சென்றார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேர் அருணாவிடம் 12 பவுன் தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இதுதவிர எஸ்.எஸ்.காலனி இந்துமதி (4 பவுன்), பசுமலை செல்வகுமார் (3 பவுன்), விருதுநகர் மலையரசி (2 பவுன்), உத்தங்குடி சுசீலா (8 பவுன்), பெத்தானியாபுரம் மல்லிகா (8 பவுன்), ஐராவதநல்லூர் பபிதா (8 பவுன்), தாம்பரம் கவிதா (7 பவுன்) பசுமலை சுப்புலட்சுமி (6 பவுன்)வில்லாபுரம் நர்மதா (3 பவுன்) ஆகிய 9 பெண்களிடம் ஒட்டுமொத்தமாக 49 பவுன் தங்கச்சங்கிலிகள் வழிப்பறி செய்யப்பட்டு உள்ளன. கொள்ளையர்கள் இதுவரை பிடிபடவில்லை என்பது வேதனையான வி‌ஷயம்.

    மதுரை மாநகர வழிப்பறி சம்பவம் தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வட்டாரத்தில் பேசியபோது, “நாங்கள் வழிப்பறி பட்டியலில் உள்ள பழைய குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    ஆனாலும் இவர்கள் வழிப்பறி உள்பட எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    இதனை தொடர்ந்து சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்களை ஆய்வு செய்தோம். இதன்மூலம் மதுரை மாநகரில் புதிய நபர்கள் சிலர் வழிப்பறியில் ஈடுபடுவது தெரிய வந்து உள்ளது.

    படிப்பை பாதியில் கைவிட்ட ஒருசில மாணவர்கள், சிறிய வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்று மீண்டவர்கள் ஆகியோர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இதுதவிர கல்லூரிகளில் படிக்கும் ஒருசில மாணவர்கள் ஆடம்பர செலவுக்காக இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவது போலீஸ் விசாரணை மூலம் தெரிய வந்து உள்ளது.

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட்டுடன் புறப்பட்டு போனால் அடுத்த 2 மணி நேரங்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை சுளையாக சம்பாதித்து விடலாம் என்பதால் மேற்கண்ட குற்றவாளிகள் உயிரை பணயம் வைத்து மேற்கண்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

    மதுரையில் வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஓரளவு கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அறிவும் உள்ளது. இதனால் அவர்கள் மதுரை மாநகரில் சிசிடிவி இல்லாத- இருள் நிறைந்த பகுதிகளை தேர்வு செய்து அங்கு வழிப்பறியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே மதுரையில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை வழிப்பறி சம்பவங்கள் நடந்தன? எவ்வளவு தங்கச்சங்கிலிகள் பறிக்கப்பட்டு உள்ளன? இதில் எத்தனை கிராம் நகைகள் மீட்கப்பட்டு உள்ளன? என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இதற்கு மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் பதில் அளித்து உள்ளது.

    அதன்படி மதுரை மாநகரில் கடந்த 2017-ம் ஆண்டில் 173 பேரிடம் தங்க நகைகள் பறிக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் 6714 கிராம் தங்கச்சங்கிலிகள் பறிபோய் உள்ளன. ஆனாலும் இதில் 2739 கிராம் சங்கிலிகள் மீட்கப்பட்டு உள்ளன.

    இதேபோல கடந்த 2018-ம் ஆண்டு 132 சம்பவங்கள் நடந்து உள்ளன. இதன்மூலம் 3606 கிராம் தங்கச்சங்கிலிகள் வழிப்பறி செய்யப்பட்டன. இதில் 1757 கிராம் தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டு உள்ளன.

    2019-ம் ஆண்டு 66 சம்பவங்கள் நடந்து உள்ளன. இதன்மூலம் 2497 கிராம் தங்கச் சங்கிலிகள் பறிபோய் உள்ளன. இதில் 747 கிராம் தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டு உள்ளன என்கிற விவரம் தெரிய வந்துள்ளது.

    மதுரை மாநகரை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கடந்த 2017-18-ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2019-ம் ஆண்டு வழிப்பறி கொள்ளை வெகுவாக குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் கேட்டபோது, மதுரையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர 100 வார்டுகளிலும் 2000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடுத்தபடியாக குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டம் தொடர்பாக எங்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளன. எனவே வழிப்பறி கொள்ளையர்களை கூடிய விரைவில் கைது செய்து விடுவோம்” என்று உறுதியுடன் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×