search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின்
    X
    உதயநிதி ஸ்டாலின்

    தி.மு.க. இளைஞர் அணியில் 29 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு- உதயநிதி ஸ்டாலின் தகவல்

    தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணியில் 29 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் தர்மபுரியில் உள்ள ஒரு திருமண மஹாலில் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் டாக்டர் செந்தில்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய நான் முதன்முதலில் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தேன். மக்கள் அவரை அமோக வெற்றி பெற செய்துள்ளனர்.

    39 எம்.பி.தொகுதிகளில் ஜெயித்தது மகிழ்ச்சி கிடையாது. ஆனால் தர்மபுரி தொகுதியில் ஜெயித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று 2-வது முறையாக இளைஞர்அணி பாசறை கூட்டத்திற்காக தர்மபுரிக்கு வந்திருக்கிறேன்.

    இளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து இருந்தோம். தற்போது 29 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துவிட்டோம்.

    தர்மபுரி என்றாலே 2 வி‌ஷயங்கள் ஞாபகத்திற்கு வரும். ஒன்று தலைவர் (மு.க. ஸ்டாலின்) கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மற்றொன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது தான்.

    தலைவரை நான் எப்போது சந்தித்தாலும் இளைஞர் அணி கூட்டம் குறித்து கேட்கிறார். இதுவரை எத்தனை மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்பட்டது, இன்னும் எத்தனை மாவட்டங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்கிறார்.

    3 மாதங்களுக்கு ஒரு முறை இளைஞர் அணி பாசறை கூட்டம் நடத்தலாம் என்று அவரிடம் கூறினேன். ஆனால் அவர் மாதத்திற்கு ஒரு மாவட்டம் என்று இளைஞர் அணி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என்று என்னிடம் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு நடந்த பாசறை கூட்டங்களை விட தர்மபுரியில் இன்று நடைபெறும் பாசறை கூட்டம் பிரமாண்டமாக உள்ளது. இங்கு சிறப்பு பேச்சாளர்கள் பேசும் பேச்சுக்களை இளைஞர் அணியினர் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டம் நடைபெற்ற மஹாலில் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் மஹாலுக்கு வெளியே எல்.இ.டி. டிவி வைக்கப்பட்டு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் பேச்சு அந்த டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது அதை நிர்வாகிகள் கேட்டனர்.

    Next Story
    ×