search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.பாரதி
    X
    ஆர்.எஸ்.பாரதி

    தி.மு.க. மீது வீண் பழி சுமத்துவதா?- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

    பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பினால் தி.மு.க. மீது வீண் பழி சுமத்துவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக எங்கள் கழகத் தலைவர் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்திற்குமான உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்”என்று அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கைக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலமைச்சர் பழனிசாமி 9-ந்தேதி அன்று வெளியிட்ட “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல” அறிவிப்பில் சந்தேகங்கள் பல உள்ளன என்பதை முதன் முதலில் அமைச்சர் ஒருவரே ஒப்புக்கொண்டிருப்பது எங்கள் கழக தலைவரின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும், விவசாயிகளுக்காக அவர் எழுப்பிய உரிமைக்குரலையும் நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

    ஆனாலும் வழக்கம் போல் தி.மு.கவையும் எங்கள் கழகத் தலைவரையும் வம்பு இழுக்கும் நோக்கில் சில வீண் பழிகளை தனது அறிக்கையில் சுமத்தியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் சி.பி.ஐ.யிடம் போய் விடுமோ என்ற அலர்ஜியில், எங்கள் கழகத் தலைவர் மீது “மீத்தேன் திட்டம் குறித்து ஏதோ கூறி இருக்கிறார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே அத்திட்டம் குறித்து விளக்கப்பட்டு விட்டது.

    அமைச்சர் ஜெயக்குமார்

    பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பை வரவேற்ற எங்கள் கழகத் தலைவர், முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பாக எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக அவரே மத்திய அரசுக்கு எடுத்துச் சென்ற முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கூட சொல்ல அவரால் முடியவில்லை.

    மாநில அரசே இதற்குச் சட்டம் இயற்ற முடியும் என்றால் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது?

    விவசாயிகளுக்கு நலன் பயக்கும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டம் முறைப்படி நிறைவேற்றப்பட்டால் அதை ஆதரிக்கும் முதல் நபராக எங்கள் கழகத் தலைவர் இருப்பார்.

    “இனி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மட்டும் அனுமதிக்கமாட்டோம்” என்று விவசாயிகளை ஏமாற்ற அதிமுக அரசு முயற்சி செய்தால் அதை முதலில் துணிச்சலுடனும் சுயமரியாதையுடனும் எதிர்ப்பதும் எங்கள் கழகத் தலைவர் அவர்களாகத்தான் இருப்பார் என்பதை அமைச்சர் உணர்ந்து கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×